மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திற்கு வரும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பத்தை அகற்ற வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் அரசு மருத்துவமனையில் புதிய டிரான்ஸ்பார்மரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த சோழவந்தான் திமுக வெங்கடேசன் எம்எல்ஏவிடம் இதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது அருகில் இருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் சோழவந்தான் பேருந்து நிலையம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றி வேறு இடத்தில் வைக்க கூறிச் சென்றார்.
ஆனால் எம்.எல்.ஏ சொல்லியும் தற்போது வரை மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது
சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதில் சிரமங்கள் ஏற்படுவதாக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள் சோழவந்தான் தபால் நிலையம் வட்ட பிள்ளையார் கோவில் பகுதி மருது மஹால் பகுதி போன்ற இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகிறது.
இதன் காரணமாக சோழவந்தானிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளும் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என சோழவந்தான் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




