மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிவாசல் பகுதியில் முன்பு குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு வரும் இஸ்லாமிய பெருமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள பள்ளிவாசல் மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளிவாசலுக்கு தொழுகை நடத்துவதற்கும் மற்றும் பல்வேறு வழிபாடுகளுக்காக இஸ்லாமிய பெருமக்கள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர் மேலும் மதுரை சோழவந்தான் மற்றும் திருமங்கலம் சோழவந்தான் மெயின் ரோட்டில் உள்ள இந்தபள்ளிவாசல் அருகில் சாய்பாபா திருக்கோவில் மற்றும் திருவேடகம் ஏடகநாதர் திருக்கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற திருக்கோவில்களும் உள்ளது.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே திருவேடகம் வைகை ஆற்று பகுதியில் முன்னோர்களின் நினைவாக தீபம் ஏற்ற வரும் பொதுமக்கள் வைகை ஆற்றின் அருகில் குளித்துவிட்டு போட்டுச் செல்லும் பழைய ஆடைகளை அப்புறப்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலின் முன்பும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது ஊராட்சி நிர்வாகத்தின் தொடர் அலட்சியம் காரணமாக இந்த பகுதி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.

ஆகையால் திரு வேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பைகளை தினசரி அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் உள்ள இந்த ஊராட்சிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








