• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அம்மா உணவகங்களில் புனரமைப்பு பணிகள்

Byவிஷா

Dec 27, 2024

சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.21 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2013 முதல் 2016 காலகட்டத்தில், அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்களைத் திறந்து வைத்தார். அந்த வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் 407 இடங்களில் திறக்கப்பட்டன. தற்போது 388 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு இட்லி ரூ.1-க்கும் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட கலவை சாதம் ரூ.5-க்கும் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் இது நாள்வரை குறிப்பிடும்படியாக பராமரிப்பு செய்யாமல் பாழடைந்து இருந்தன. பல கட்டிடங்களின் உள் பகுதியில் சமையல் செய்யும்போது வெளியேறும் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் அசுத்தமாக உள்ளன.
பல இடங்களில் வெளிச்சமின்றி, போதிய மின் விளக்குகள் இல்லாமலும் உள்ளன. பொதுமக்கள் உண்பதற்கான மேசைகளின் கால்கள் உடைந்து அவை ஓரங்கட்டப்பட்டுள்ளன. மேலும் கட்டிடத்தை சுற்றி உலோக தகடுகளால் அமைக்கப்பட்டுள்ள கூரைகளும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்கு பிறகு, அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டிடங்களில் உள்ள விரிசல்களை சரிசெய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேலும் கடந்த 2013-ம் ஆண்டு வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி போன்றவை பழுதாகி கிடக்கும் நிலையில் அவற்றுக்கு பதிலாக புதிதாக வாங்கி கொடுக்கவும், சிறிய பழுதுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தற்போது அனைத்து அம்மா உணவகங்களிலும், அன்றாட உணவு விநியோகப் பணிகள் பாதிக்காதவாறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் கூரைகள் மாற்றப்பட்டு வருகின்றன.
சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், மின்சார ஒயர்களை மாற்றுதல், மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. புதிதாக மின்சாதன பொருட்களை வாங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து அம்மா உணவகங்களும் புதுப்பொலிவு பெறும்” என்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.