தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும், சொத்து வரி, மின் கட்டண வரி, குடிநீர் வரி, பால் கட்டணம் உயர்வு என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பதிவுத்துறை கட்டணங்களையும் உயர்த்தி உள்ளது. பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை 10) முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, ரசீது ஆவணத்துக்கான பதிவுக் கட்டணம் ரூ.20-இல் இருந்து ரூ.200-ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையிலான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவுக் கட்டணம் ரூ.4,000-இல் இருந்து ரூ.10,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரைத் தீர்வு ரூ.25,000-இல் இருந்து ரூ.40,000-ஆகவும், தனி மனை பதிவுக்கான கட்டணம் ரூ.200-இல் இருந்து ரூ. 1,000-ஆகவும் உயர்த்தப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.10,000 என்றுள்ளது. இந்தக் கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என்ற அளவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அனைத்தும் இன்று திங்கள்கிழமை (ஜூலை 10) முதல் நடைமுறைக்கு வருகிறது.