சமீபத்தில் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்ததாக அமெரிக்கா, தென்கொரியாவிற்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24ம் தேதி துபாய் சென்றார்.
அவருடன் சில அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலினின் குடும்பத்தாரும் பயணம் செய்தனர். இந்த பயணத்தின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இடப்பட்டுள்ளன. அந்நிய முதலீடுகளை ஈர்க்கவே இந்த பயணம் மேற்கொண்டதாக அரசு விளக்கமளித்துள்ளது. ஆனாலும், பா.ஜ., அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்து வந்தனர்.இந்நிலையில், முதல்வரின் அடுத்தக்கட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளன. அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும். கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அந்நிய நேரடி முதலீடு 41 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது’ என்றார்.