பிரிக்ஸ் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 2வது நாளான இன்று உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் காரிடார் என்று அழைக்கப்படும் கோவில் பிரகாரம் உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்கும் காட்சி பின்னணியாக உருவாக்கப்பட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியால் தமிழர்களின் கட்டிடக்கலைப் பெருமை மீண்டும் உலகிற்கு அரிய தரப்பட்டுள்ளது. இதன் சிறப்பை இந்த கட்டுரையில் காண்போம்.

கட்டிடக்கலையின் மகத்துவம்
ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோவிலின் மிக முக்கியமான கட்டிடக்கலைச் சிறப்பு அதன் மூன்றாவது பிரகாரம் அல்லது மூன்றாவது காரிடார் ஆகும். வெளிப்புறக் காரிடாரில் சுமார் 1,212 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் தனித்துவமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் உயரம் சுமார் 30 அடி கொண்டதாகும்.

இந்த ஆயிரக்கணக்கான தூண்கள் ஒரே நேர்கோட்டில் தொடர்ச்சியாக அமைந்திருப்பதை ஒரு முனையில் இருந்து பார்க்கும்போது உருவாகும் காட்சியியல் ஆழம் (perspective) தான் இந்த காரிடாரின் மிகப்பெரிய கவர்ச்சி.
இந்தப் பிரகாரத்தின் மொத்த நீளம் – சுமார் 3,850 அடி

கோவிலின் உள் மற்றும் வெளிப்புற பிரகாரங்களைச் சேர்த்து காரிடார்களின் மொத்த நீளம் சுமார் 3,850 அடி ஆகும். அதாவது சுமார் 1.17 கிலோமீட்டர்.
வெளிப்புற மூன்றாவது பிரகாரத்தின் கிழக்கு-மேற்கு நீளம் சுமார் 400 அடி வீதமும், வடக்கு-தெற்கு பகுதி சுமார் 640 அடி வீதமும் அமைந்துள்ளன.
இந்த காரிடாரை கட்டியது யார்?
ராமநாதசுவாமி கோவில் ஒரே ஒரு மன்னரால் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல. பல நூற்றாண்டுகளாக பாண்டியர்கள், சேதுபதி மன்னர்கள் உள்ளிட்ட பல அரசர்களின் பங்களிப்பில் கோவில் படிப்படியாக விரிவடைந்தது. மாவட்ட நிர்வாகத்தின் வரலாற்றுக் குறிப்பின்படி, கோவில் கட்டுமான வரலாறு 12ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்கிறது.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறிய தகவல்கள் பின்வருமாறு, ‘ராமநாதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியின் சிற்றரசரர்களாக இருந்தாலும், உலகின் மிகப்பெரிய கோயில் பிரகாரத்தை இராமேஸ்வரத்தில் கட்டிய பெருமை கொண்டவர்கள் சேதுபதி மன்னர்கள். இது கடற்கரைப் பாறைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதை ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி கி.பி.18ஆம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். இது நான்கு கோபுர வாயில்களையும் இணைக்கிறது. பிரகாரத்தின் இருபுறமும் உயரமான மேடை அமைக்கப்பட்டு அதன்மீது 9 மீட்டர் உயரமான 1212 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உள்நோக்கி வளைந்தது போன்ற அமைப்பில் உள்ளன. தூண்களின் மேற்பகுதியில் சிங்கம் அமர்ந்திருப்பதுபோல அமைக்கப்படுவது விஜயநகர மன்னர்களின் ஒரு பொதுவான அம்சம். அதே கலைப்பாணியையே சேதுபதிகளும் பின்பற்றியுள்ளனர். மூன்றாம் பிரகாரத்தின் தெற்குப்பகுதி 207 மீட்டர் நீளமும், வடக்குப்பகுதி 194.70 மீட்டர் நீளமும், கிழக்குப்பகுதி 130.50 மீட்டரும், மேற்குப்பகுதி 118.50 மீட்டர் நீளமும் உள்ளன. இதன் மொத்த சுற்றளவு 651மீ ஆகும். இதை சொக்கட்டான் மண்டபம் என்றும் அழைப்பர்’ என்கிறார்.

காரிடாரின் மற்றொரு தனிச்சிறப்பு
இதன் தரைத்தள அமைப்பு சதுரங்கப் பலகையைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாக்களில் உற்சவ மூர்த்திகள் தொடர்பான நிகழ்வுகளும் இப்பகுதியுடன் தொடர்புடையவை. இதனால் இந்த காரிடார் வெறும் நீண்ட நடைபாதை மட்டும் அல்ல. கட்டிடக்கலை + சிற்பக்கலை + வழிபாடு + திருவிழா மரபு ஆகிய நான்கும் ஒருங்கிணைந்த ஒரு மிகப்பெரிய கோவில் அமைப்பாக இது விளங்குகிறது.
ஏன் இவ்வளவு நீளமான காரிடார்?

கோவில் கட்டிடக்கலையில் பிரகாரம் என்பது வெறும் நடைபாதை அல்ல. அது கோவிலைச் சுற்றி அமைந்துள்ள புனிதமான சுற்றுப்பாதை. பக்தர்கள் சுவாமியை தரிசித்து, கோவில் அமைப்புக்குள் சுற்றி வருவதற்கும், உற்சவ மூர்த்திகளின் ஊர்வலங்களுக்கும், பல்வேறு சடங்கு நிகழ்வுகளுக்கும் இந்த பிரகாரங்கள் பயன்பட்டன. ராமேஸ்வரத்தில் இந்த மரபு மிகப்பெரிய கட்டிட அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை நீளும் தூண்களின் தொடர்ச்சி, கோவிலின் ஆன்மிக அனுபவத்தையே ஒரு கட்டிடக்கலை அனுபவமாக மாற்றுகிறது.
முடிவே இல்லாத கல் மாளிகை
ராமேஸ்வரம் காரிடாரின் மிகப்பெரிய சிறப்பு அதன் தூண்களின் வடிவமைப்பு.
தூண்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வெறும் கல் தூண்களாக இல்லாமல், சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. அவற்றின் அளவு, வடிவம், அலங்கார வேலைப்பாடு, மேல்பகுதியில் இணையும் கல் கட்டமைப்பு ஆகியவை சேர்ந்து நீண்ட தொடர்ச்சியான காட்சியை உருவாக்குகின்றன. அதனால்தான் இந்த காரிடாரை பார்க்கும்போது— ஒரு தூண் முடிந்ததும் இன்னொரு தூண் என்ற உணர்வு ஏற்படாமல்,
முடிவே இல்லாத கல் மாளிகை போன்ற தோற்றம் உருவாகிறது.
ராமேஸ்வரம்: கட்டிடக்கலையைத் தாண்டிய ஆன்மிக முக்கியத்துவம்
ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று.
மேலும் ராமேஸ்வரம் இந்து சமயத்தின் முக்கியமான சார் தாம் (Char Dham) யாத்திரைத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.கோவிலின் வரலாற்று-ஆன்மிக மரபு ராமாயணத்துடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. கோவிலில் உள்ள ராமநாதசுவாமி லிங்கம் தொடர்பாக ராமாயண மரபில் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதேபோல் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் ராமேஸ்வரம் யாத்திரையின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றன.
பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங்: 2019 சம்பவம்
இந்த காரிடார் உலக அளவில் மீண்டும் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதற்கு முக்கிய காரணம் 2019ஆம் ஆண்டு மோடி–ஷி ஜின்பிங் சந்திப்பு.
2019ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தமிழ்நாட்டில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பின்போது மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.
அந்த நிகழ்வின் பின்னணியில் ராமேஸ்வரம் கோவிலின் இந்த புகழ்பெற்ற காரிடார் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடக்கலை சர்வதேச இராஜதந்திர காட்சியின் ஒரு பகுதியாக மாறியது.
2026 BRICS: மீண்டும் உலக அரங்கில் ராமேஸ்வரம்

2026 செப்டம்பர் 12–13 தேதிகளில் இந்தியா நடத்தும் 18ஆவது BRICS உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களை வரவேற்கும் காட்சியின் பின்னணியில் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் புகழ்பெற்ற காரிடார் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஒரு வகையில் பார்த்தால்— 2019ல் ராமேஸ்வரம் கோவில் காரிடார் மோடி–ஷி சந்திப்பின் சர்வதேச காட்சியாக இருந்தது; 2026ல் அதே கோவில் கட்டிடக்கலை BRICS உலகத் தலைவர்களை வரவேற்கும் இந்தியாவின் கலாச்சார அடையாளமாக மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஆழமான ஆன்மீக பாரம்பரியம் – தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் தனது X பதிவில், ‘ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் காரிடார் வெறும் கட்டிடக்கலை அதிசயம் அல்ல. தமிழ்நாட்டின் ஆழமான ஆன்மிக பாரம்பரியம் மற்றும் தமிழ் கோவில் கட்டிடக்கலை மேன்மையின் அடையாளம். மேலும், உலகத் தலைவர்களின் முன்னிலையில் இந்த காட்சி இடம்பெறுவது, உலக அரங்கில் தமிழர் பண்பாடு மற்றும் தமிழ்நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரியமே நமது வலிமை
தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில்,
‘புதுமை, வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பில் இந்தியாவின் முன்னேற்றங்களுடன், அதன் தொன்மையான நாகரிகப் பாரம்பரியத்தையும் உலக அரங்கில் பிரதமர் மோடி முன்னிறுத்துவது பாராட்டுக்குரியது. பிரிக்ஸ் உச்சி மாநாடு தளத்தில் ராமேஸ்வரம் இடம்பெற்றிருப்பது, இந்தியாவின் எதிர்காலப் பயணம் அதன் அழியாத நாகரிகப் பாரம்பரியத்தின் வலுவான அடித்தளத்தில் தொடர்கிறது என்பதை உலகிற்கு உணர்த்துகிறது. நமது பாரம்பரியமே நமது வலிமை; நமது நாகரிக மரபே நமது நிலையான அடையாளம்’ என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.








