பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் கீழக்கரையில் என்.ஐ.ஏ சோதனை செய்ததில் சிம்கார்டு, லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காடு தெரு பகுதியில் சம்சுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ இன்று சோதனை நடத்தியது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இவர் மீது கடந்த 2023ல் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையிலும், சமீபத்தில் பெங்களூரில் ராமேஸ்வரம் ஃகபேயில் நடந்த வெடிகுண்டு விவகாரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், அவர் மீது ஹவாலா மோசடி புகார் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் கீழக்கரையில் இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது. இதில், அல் முபித் புது கிழக்கு தெரு பகுதியில் நடந்த சோதனையின் போது, அந்த வீட்டில் ஆறு சிம் கார்டுகள் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கிருந்து ஒருவரை விசரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பருத்திக்காரர் தெருவைச் சார்ந்த தமீம் ஆசிக் என்பவரது வீட்டில் சோதனையின் போது ஆதார்கார்டு மற்றும் கல்வி சான்றிதழ்களை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.