• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத வழிபாடு

Byமகா

Feb 6, 2022

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிராமத்து இளைஞர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் திருவிழா நடைபெற்றது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தெற்கு தெரு இந்து நாடார் உறவின்முறை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

குடும்பங்களில் உள்ள ஆண்கள் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு வனப்பேச்சி அம்மன் கோவில் சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்று கோவிலில் விடியவிடிய வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அனைத்து இளைஞர்களும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருள்மிகு வனப்பேச்சி அம்மன் கோவில் சென்றடைந்தனர்.

அங்கு 30 மூடை அரிசியை சமையலும், டன் கணக்கில் காய்கறிகளும் கொண்டு சைவ சாப்பாடு வழங்கப்படும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஆண்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

அதேசமயம் முகவூரில் அனைத்து வழித்தடங்களும் அடைக்கப்படும். பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கிராமத்து பெண்கள் விடிய விடிய விழித்திருந்து பாரம்பரிய விளையாட்டு மற்றும் இதர கலாச்சார நிகழ்வுகள் நடத்தி மகிழ்வது வழக்கம்.

ஆண்கள் யாரும் கிராமத்தில் இல்லாத நேரத்தில் பெண்கள் செல்போன் எதுவும் உபயோகிக்க கூடாது எனவும், ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இத்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.

கிராமத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும் இத்திருவிழாவில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். விடிந்த பின்னர் காலை 11 மணி அளவில் இங்கு உள்ள பிரசாதத்தை கிராமத்திற்கு கொண்டு சென்று எல்லையில் உள்ள பெண்களிடம் காண்பித்தால் மட்டுமே காலை 11 மணிக்கு மேல் கிராமத்திற்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். 300 ஆண்டுகளுக்கு மேல் இத்திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.