• Tue. Feb 10th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

விரகனூர் மதகு அணை சீரமைப்பு ராஜன் செல்லப்பா ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Feb 9, 2026

வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிக முக்கியமான அணைகளில் ஒன்றான விரகனூர் மதகு அணையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் கட்டமைப்புப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் பொருட்டு, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக நீர்வளத் துறை சார்பில் மதகுகள், இயந்திரத் தளவாடங்கள் மற்றும் அணை மீதுள்ள சாலைகளைச் சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் காரணமாக அணை வழியேயான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும், பொதுமக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறும் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விரகனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பெரும் கவலை தெரிவித்தனர். குறிப்பாக, வைகை ஆற்றின் வடகரை (சிவகங்கை சாலைப் பகுதி) மற்றும் தென்கரை (ராமேஸ்வரம் நெடுஞ்சாலைப் பகுதி) ஆகியவற்றை இணைக்கும் முக்கியப் பாலமாக இந்த அணைச் சாலை விளங்குவதால், இதனை முற்றிலும் மூடினால் அன்றாடப் பணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கும் என்று பொதுமக்கள் முறையிட்டனர். பொதுமக்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில் தற்காலிகப் பாதை அல்லது மாற்று ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜன் செல்லப்பா அவர்கள் இன்று விரகனூர் மதகு அணைப் பகுதிக்கு நேரில் வருகை தந்து விரிவான கள ஆய்வை மேற்கொண்டார் பழுதடைந்த மதகுகள் மற்றும் சேதமடைந்த சாலைகளின் தற்போதைய நிலையை நீர்வளத் துறை அதிகாரிகளுடன் இணைந்து எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் கோரிக்கையின்படி, வடகரையிலிருந்து தென்கரைக்குச் செல்ல ஏதுவாக குறைந்த தூரத்திலான மாற்று வழித்தடங்களை அமைக்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது

ராஜன் செல்லப்பா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்கள் மூன்றும் உள்ளடக்கியிருந்த காலத்தில் வைகை அணை சிறப்புக்குரிய அணையாகச் செயல்பட்டது. அந்த வைகை அணையைத் தொடர்ந்து ஒரு மதகணையாக இன்றைக்கு விரகனூர் மதகணை நீண்ட நெடிய நாட்களாக, 50 ஆண்டுகளுக்கு மேலாக அது பயன்பட்டு வருகிறது. இங்கே சிறுவர்களும், ஏனைய மாணவ மாணவியர்களும் இதில் மதகணை மட்டுமல்லாமல் ஒரு பூங்காவாக, சுற்றுலா தங்குகிற மாளிகையாக இது மக்கள் வந்து தம்முடைய பொழுதைக் கழிக்கிற இடமாக நீண்ட நெடுநாள் செயல்பட்டு வந்தது மெல்ல பராமரிப்பு குன்றிய காரணத்தால், இந்தப் பூங்கா மிகச் சிறந்த முறையில் செயல்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்த அடிப்படையில் ஒரு மூன்று முறை சட்டமன்றத்திலே கேள்வி நேரத்திலே மாண்புமிகு WRD அமைச்சர் (நீர்வளத்துறை அமைச்சர்) மதிப்பிற்குரிய மாண்புமிகு துரைமுருகன் அவர்களிடம் இது குறித்து கேள்வி கேட்ட பிறகு, அவர் சில செய்திகளைத் தெரிந்துகொண்டு அதற்கான ப்ரோபோசலை (proposal) கொடுத்தார்கள். அந்த அடிப்படையிலே முதற்கட்டமாக இங்கிருக்கிற ஷட்டர்கள் (shutters) பழுதுபட்டுப் போயிருக்கிறது. இப்போ நிறைய ஷட்டர்களின் எண்ணிக்கை, இப்பொழுது அந்த மதிப்பிற்குரிய SDO அவங்க சொல்றாங்க… AE சொல்றாங்க… இங்கே ஏறக்குறைய 18-ல் 16 சேதமடைந்திருக்கிறது. ஆகவே அதற்கான ப்ரோபோசல் அனுப்பப்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்று ஏறக்குறைய சுமார் 33 கோடி ரூபாய்க்கு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு தற்காலிகமாக இந்தப் ப்ராசஸ் (process) நடந்துகிட்டே இருக்கு

அந்த வகையிலே இந்த ஷட்டர்களெல்லாம் மாற்றுவதற்கான பணியைச் செய்வதற்கு இன்றைக்கு இந்த அதிகாரிகள் அதற்கான முயற்சி எடுத்துக்கொண்டு அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் மாண்புமிகு அமைச்சரிடம் சட்டமன்றத்தில் கேட்டதற்கிணங்க இந்தப் பூங்கா, சுற்றுலா மாளிகையும் ஒரு மறு பரிசீலனை செய்து அதற்கான பணியும், அதற்கான நிதியும் ஒதுக்குவதாக வாய்மொழி உத்தரவு சொல்லியிருக்கிறார்கள், அதற்கான கடிதமும் அனுப்பியிருக்கிறார்கள்.

ஆக நம்முடைய திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள இந்த விரகனூர் மதகணை இன்னும் சிறப்பாக இந்தப் பகுதி மக்களுக்கும், மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் கிழக்கு தொகுதி மக்களுக்குப் பயன்படுகிற அளவிலே இந்த மதகணை சீரமைக்கப்பட வேண்டும் என்பதிலே இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

அந்த அடிப்படையில் இன்றைக்கு உரிய அலுவலர்களுடன் டிஸ்கஷன் (discussion) பண்ணும்போது, பரிசீலனை செய்யும்போது சில செய்திகளை அறிய முடிந்தது. ஏனென்றால் இந்தப் பணி ஆரம்பித்தவுடன் இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இந்தப் பாதையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மதகணை பாலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்… டூ வீலர் போகுது, ஸ்கூட்டர் போகுது, ஷேர் ஆட்டோ போகுது, ஏனைய மக்கள், மாணவர்கள் நடந்து இது இரண்டுக்கும் ஏறக்குறைய திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் கிழக்குத் தொகுதிக்கும் இணைப்புப் பாலமாக இந்தப் பாலம் இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தப் பாலத்தைச் சீரமைக்கிற காரணத்தால் இதை அடைக்க வேண்டிய சூழ்நிலையிலே அதிகாரிகள் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் பகுதி மக்கள் இதை அடைத்தால் எங்களுக்கு மாற்று வழி சிறப்பானதாக அமைக்கப்பட வேண்டும்… இந்த ஆற்றைக் கடப்பதற்கான உரிய பாலங்கள் அருகாமையிலே இல்லை. ஆகவே இதற்கான மாற்று வழி ஏற்பாடு செய்து கொண்டு அதற்குப் பின் இந்தப் பணியை ஆரம்பியுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்

நிர்வாகமும் ஏறக்குறைய 12-ஆம் தேதியிலிருந்து இந்தப் பாதையை மூடுவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆகவே கொஞ்சம் தாமதமாகவும், மாற்றுப்பாதை ஏற்பாடு செய்துவிட்டு அதை முழுமையாக இரவு நேரத்திலுமே… ஏன்னா ஆத்துக்குள்ள கடக்க வேண்டிய சூழ்நிலை… ஏன்னா ஆற்றுக்குள்ள கடக்கிறவர்களுக்குச் சில தவறுகள் நடப்பதற்கு இன்றைக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தத் தவறுகள் நடக்காவண்ணம் அனைவரும் பாதுகாப்பாகச் செல்கிற வண்ணம் அந்த மாற்றுப் பாதையைச் சிறப்பாக அமைக்க வேண்டி தொகுதி மக்கள் சார்பாக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

அவங்களும் அதற்கான பணிகளைச் செய்வதற்கு ஊராட்சித் துறையும் கலந்துகொண்டு அங்கே மின் ஒளி வழங்குவதற்கும், பாதை அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த வகையிலே அவர்கள் செய்கிற பணி சிறப்பாக அமைய வேண்டும், மக்களுக்காக உதவ வேண்டும் என்ற அடிப்படையில் இன்றைக்கு அவங்களைக் கேட்டிருக்கோம்.

இரண்டாவது இந்தப் பாதை மீண்டும் உருவாக்குகிற போது, அந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கிற போது இந்தப் பகுதியிலே இரும்புக் கம்பிகளாக வைத்துச் செய்வதாகச் சொல்லியிருக்கிறது…
மக்கள் அதை எதிர்பார்க்கல, பட் மின்சாரம் அதைப் பாயாத அளவுக்கு ஏற்கனவே இருந்த கான்கிரீட்டை உடைத்துவிட்டு… ஏன்னா நவீன காலத்துல இப்ப கான்கிரீட் பாலம் அமைப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகக்கூடும். ஆகவே அவர்கள் இரும்புக் கம்பிகளால் அமைக்க இருக்கிறார்கள். அதை மட்டும் இந்தப் பாதுகாப்போடு டெக்னிக்கலா (technically) எப்படி பண்ணனும்ன்றத தெரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி பண்ணுங்கன்னு நாங்க ஒரு சஜெஷன் (suggestion) கொடுத்திருக்கோம், யோசனை கொடுத்திருக்கோம்.

அந்த வகையிலே இங்கிருக்கிற பொதுப்பணிதத்துறை SDO அவர்களும் AE அவர்களும் அதற்கான உயர் அதிகாரியிடம் தாங்கள் ஆயானை கேட்டுக்கொண்டு எப்படிச் செய்வது என்று டெக்னிக்கலா பண்ணச் சொல்லியிருக்கிறார்கள்

இந்த விரகனூர் டேம் (dam) இந்தப் பகுதி மக்களுக்கு ஒரு மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படுவதிலே மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு பணி தொடங்கியிருக்கிறது. அந்தப் பணிக்கு வாழ்த்துக்களைச் சொன்னாலும்,

நீங்கள் முறையாகத் திறமையாக மக்களுக்குப் பயன்படுகிற வகையில் மக்களுடைய வசதி குறித்து வசதிக்காகச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டிருக்கிறேன். அதை அவங்க செய்வாங்க. ஆக இந்த அரசு இன்றைக்கு இந்தக் காலகட்டத்தில் இன்னும் இந்த இடைக்கால பட்ஜெட் இருக்கு. அதுக்குள்ள சட்டமன்றத்தில் பேசுவதாக… அவங்க இடைக்கால பட்ஜெட்ல இது போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறாங்களான்னு தெரியல. ஒதுக்கவில்லை என்றாலும் மீண்டும் ஒதுக்கி இப்போதைக்கு இந்த ஷட்டர்களை மாற்றி அமைப்பதிலே அவர்கள் முன்னே இருக்கிறார்கள்.

தொடர்ந்து இந்தப் பூங்காவையும் அந்தச் சுற்றுலா மாளிகையையும் சீரமைப்பதற்கு அதற்கான நிதியைப் பெற்று அதையும் செய்து முடித்தால் தான் இந்த இடம் மீண்டும் வளர்ச்சியோடு இருக்கும். ஏன்னா வண்டியூர் பூங்காக்காக அடிக்கடி சொல்றோம்… வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்த வண்டியூர் பகுதிக்கு ஏறக்குறைய நிறையத் தொகை வாங்கி கொடுத்து அதைச் சீரமைத்தோம்.

அதே மாதிரி இதையும் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டு… அன்போடு கேட்டு அந்த வகையில அதிகாரிகள் உங்களுக்கு உரிய விளக்கத்தை இந்த எண்ணைக் கொடுப்பாங்கன்னு நம்புறேன்.

2021 தேர்தல் அறிக்கையிலே பணிகள் ஏற்கனவே தொடங்கிட்டாங்க பற்றிய கேள்விக்கு

ஏற்கனவே பணிகள்… இந்த ஷட்டர்களை மாற்றுகிற பணியை உரிய டெண்டர் போட்டு… டெண்டர் போட்டு ஒப்புதல் பண்ணி வேலை ஆரம்பிச்சிருக்காங்க. ஆனா மெல்ல மெல்ல பண்ணிக்கிட்டு இருக்காங்க ஏன்னா அது ஷட்டர்ன்றதுனால அவங்க ரெடிமேடா பண்ணி கொண்டு வரணும், பேக்டரில (factory) ரெடியாகிட்டு இருக்கு

பாதைகள் அடைக்கப்படும்னா எப்போ பற்றிய கேள்விக்கு

பாதைகள் 12-ஆம் தேதியிலிருந்து அடைக்கப்படும்னு அவங்க அறிவிப்பு கொடுத்திருக்காங்க. ஆனா நான் மாற்றுப்பாதை ஏற்பாடு செய்துவிட்டு இதை அடைங்கன்னு சொல்லியிருக்கேன். மாற்றுப்பாதை ஏன்னா ஏற்கனவே ஒரு 15 மீட்டர் அளவுக்குத் தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. ஏன்னா நம்பெல்லாம் பார்க்கிறோம்… என்ன உயர்நீதிமன்றம் எல்லாரும் சொல்ற மாதிரி இங்க இந்த கழிவு நீர் கலந்துகொண்டிருக்கிறது. ஏன்னா அதைத் தடுப்பதற்குத்தான் எல்லா பொது அலுவலர்களுக்கும் முயற்சி பண்றோம், ஆனா முடியல. இப்பக்கூட அந்த கழிவு நீர் கலப்பதில்தான் இங்க சலவைத் தொழிலாளர்களெல்லாம் சலவை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதை மாற்றுவதற்கு இந்த முழுமையான வேலை முடிந்த பிறகு அதைக் கூட மாற்றுவதற்கான வழிவகை இருக்கும். ஏன்னா இதை முழுமையாப் பார்த்த பிறகு இதற்கான வழிவகை, இந்த கழிவு நீர் இங்க கலக்காத அளவுக்கு என்ன செய்ய முடியும் என்பதையும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது ஆகவே இந்தப் பகுதியைப் பொறுத்தவரை மாற்று வழியை இவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள். இங்கிருக்கிற பக்கத்துல இருக்கிற பொதுநலவாதிகள், பொதுநலத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்களும் இதைப் பற்றி எங்களுக்குக் கருத்துச் சொன்னதுனாலதான் இன்றைக்கு உடனடியாக வரவேண்டியிருந்தது. பொதுநல அலுவலர்கள் நல்ல பாதையை மாணவர்கள், இளையவர்கள் கடக்கிறாங்க… அது இரவு நேரத்தில பாதுகாப்பு வேண்டி இருக்கு. அதுக்கு என்ன வழி அப்படின்றத மட்டும் தான் அவங்க… எப்படிப் பண்ணப் போறாங்க ஏன்னா அவங்களால பாதையை போட்டுற முடியும். ஆனா இரவு நேரத்தில மின் ஒளி கொடுக்க முடியுமான்னு சந்தேகமா இருக்கு. ஏன்னா எப்படினாலும் மக்கள் 11 மணி வரைக்கும் பயன்படுத்துறாங்க. காலையில் எளிதாகப் பயன்படுத்துறாங்க. நைட்லயும் தொழில் ரீதியா போறவங்க போறாங்க… அவங்களுக்கு மின் ஒளி வழங்கி பாதுகாப்பு கொடுக்க என்ன வழி இருக்கிறது என்பதை மட்டும் இப்போ அவங்ககிட்ட கேட்டிருக்கோம். அது நாங்களும் என்ன முடிவோ இங்க இருக்கிற மக்கள்ட்ட கேட்டுச் சொல்ல தயாராக இருக்கிறோம்.

எதிர்காலம் வந்து சிறப்பாக இருக்கும். அடுத்த ஆண்டு… இப்பதான் பணியைத் தொடங்கி இருக்காங்க… இன்னும் மூணு நாலு மாசம் ஆகும். அரசியல் ரீதியா நான் சொல்றதா இருந்தா, இனி மீண்டும் நாங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்ணா திமுக ஆட்சி வருகிற போது இன்னும் இது சிறப்புக்குரிய இடமாக மாற்றுவதற்கு நாங்கள் முடிவு எடுத்திருக்கிறோம். மாண்புமிகு எடப்பாடியார் தலைமையிலே நல்ல பணி செய்வோம் என்ற உறுதியினை உங்களுக்கு அளித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில அதிகாரிகள், இன்றைக்கு இருக்கிற அரசின் நடவடிக்கைகளை அவங்க சொல்லுவாங்க. இங்கிருக்கிற ஏன்னா WRD டிபார்ட்மென்ட் (WRD department) ரொம்பக் கவனம் செலுத்துறாங்க. அந்த கவனம் செலுத்தினாலும் கூட அது முறைப்படியாக இன்னும் செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டும் அவர்கள் முன் வைத்திருக்கிறேன்.

2021 அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே விரகனூர் பூங்காவைச் சீரமைத்து படகு குழாம் அமைப்பதாக சொல்லியிருந்தது பற்றிய கேள்விக்கு

ஆமா… அதச் சொல்லியிருந்தோம், இல்லைன்னு சொல்லல… நாங்க தயாராகத் தான் இருக்கோம், படகு சீரமைப்பு… படகு அமைப்பு எல்லாமே இப்பயும் பண்ணத்தான் போறோம். 2021-ல ஆளுங்கட்சி அண்ணா திமுக வர வாய்ப்பில்லாமப் போச்சு.

2026-ல அண்ணா திமுக ஆட்சி வர இருக்கிறது. நிச்சயமாக இது பெரிய படகு குழாமாக, சுற்றுலாப் படகாக நிச்சயமாக உறுதியாகச் சீரமைக்கப்படும். மிகச்சிறப்பான பகுதியாக மதுரை மாவட்டத்தில் விரகனூர் மதகணை… ஏன்னா இப்ப 2 மீட்டர் வரைக்கும் தான் மதகணை தேக்க முடியும். நான் கூட அவங்ககிட்ட கேட்டேன்… 3 மீட்டர் தேக்குனா இதுல பிரசாதம் வரும்… இல்ல 3 மீட்டர் தேக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லியிருக்காங்க. அதனால 3 மீட்டர் தேக்குனா நம்ம சொல்ற… எதிர்பார்க்கிற அந்த படகு குழாம்… வண்டியூர்ல சொல்லிக்கிட்டே இருக்கோம், இப்ப இங்க வந்து படகு குழாம் அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பையும் நிச்சயமாக நாம் சீரமைப்போம்

பூங்கா பணிகளில ஏதும் நடக்குமா பற்றிய கேள்விக்கு

இப்போதைக்கு இந்தப் பணி முடிச்ச பிறகுதான் அவங்க பண்ண முடியும். இந்தப் பணியை… இந்த ஷட்டர் போட்டு அதைப்பண்ணப் பிறகுதான் அவங்க பண்ண முடியும். அடுத்தடுத்த ஒவ்வொரு பணியா… இதுல இப்போ மக்கள் கவனம் வந்துவிட்டது.

இது வரை மக்கள் 50 ஆண்டுகாலமாகச் சீரமைக்காமல் இருந்த இந்த விரகனூர் மதகணை மீது அரசுக்கும் மக்களுக்கும் கவனம் வந்துவிட்டது. ஆகவே இனி இந்தப் பணி மிகச் சீராகச் சிறப்பாக இந்த விரகனூர் டேம் மிகச் சிறப்பாக இருக்கும். மக்களுக்குப் பயன்படுகிற வகையிலே இந்தப் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் பயன்படுகிற வகையிலே இது அமையும் என் ராஜன் செல்லப்பா MLA கூறினார்.