தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றனர்.
ராகுல்காந்தி கோவை வருகையை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
கோவை மற்றும் நீலகிரியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இதுவரை 2முறை வந்து சென்றுள்ளார். முதல் கட்டமாக இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ராகுல்காந்தி கோவை வருகிறார்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி,கரூர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, ஈரோடு பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் பொது கூட்டம் நடைபெற உள்ளது.
ராகுல்காந்தி நெல்லையில் பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோவில் கலந்து கொண்டு, தனி விமானம் மூலம் கோவை வருகை தர உள்ளார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பிரச்சார மேடைக்கு வருகிறார். பின்னர் மீண்டும் கோவை விமான நிலையம் வந்து டெல்லி செல்கிறார்.
அதே போல தனி விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பிரச்சார மேடைக்கு வருகிறார். தொடர்ந்து இருவரும் ஒரே மேடையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேடையில் பேச உள்ளனர். மேலும் பிரச்சார பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.