• Sat. Jun 10th, 2023

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள ராகுல் டிராவிட், இந்தியாவுக்கான துடிப்புமிக்க இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார்.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான வயது வரம்பு 60ஆக இருக்கும் நிலையில், தற்போது ரவி சாஸ்திரிக்கு 59 வயதாகிவிட்டது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள பிசிசிஐ-யிடம் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் கசிந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைமை பொறுப்பில் ராகுல் டிராவிட் இருந்து வரும் நிலையில், அந்தப் பதவிக்கு விவிஎஸ் லஷ்மன் வருவார் என்று கூறப்படுகிறது.

ரவி சாஸ்திரியின் பதவிக் காலத்தில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரையும், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டி வரையிலும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *