• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஐ.டி.ஐ. விடுதியில் ராகிங் சர்ச்சை..,

ByKalamegam Viswanathan

Sep 23, 2025

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில் ஒரு மாணவரை சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி காலணியால் தாக்கி துன்புறுத்துவது போல் வீடியோ காட்சி பதிவாகி உள்ளது. நள்ளிரவு நடந்த மனித உரிமை மீறல் சம்பவம் மாணவர் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் இடையே ஏற்பட்ட இந்த சம்பவம் ராகிங் சம்பவமாகவே கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதியில் பாதுகாப்பு சூழல் குறித்தும், மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளியில் இடைநிற்றல் ஆன மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மீண்டும் கல்வி வழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் அரசு சார்பில் அதன் ஒரு பகுதியாக தொழிற்கல்வி வழங்கும் நோக்கில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ.யில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அங்கு சேர்க்கப்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த ஒரே மாணவரை, உடன்படிக்கும் சக மாணவர்கள் கூட்டாக தாக்கி துன்புறுத்தி உள்ளார்கள். அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளனர் இதனால் இந்த மாணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்களுக்கு எதிராக ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதி காப்பாளர் பாலசுப்பிரமணியன் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு்ள்ளார். ராக்கிங்கில் ஈடுபட்ட மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்து மேலும் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.