கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் இன்று துவங்கியது. இதில் வீடற்ற நாய்களுக்கு இலவசமாக ARV(Anti Rabies Vaccine) எனப்படும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் கால்நடை மருத்துவர்கள் தெரு நாய்களுக்கு அந்த தடுப்பூசியை செலுத்தினர்.
இந்த முகாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மாநகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் துவங்கப்பட்டு உள்ளதாகவும் NGO க்கள் மூலம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து அனைத்து வார்டுகளிலும் உள்ள தெரு நாய்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார். மேலும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமல்லாமல் ஊராட்சி பகுதிகளிலும் இந்த தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த ARV தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் யாரையாவது கடித்தால் பாதிப்புகள் இருக்காது எனவும் கூறினார். கோவை மாவட்டத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் நேரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே மாணவியை வகுப்பறைக்கு வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முழுமையாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் Orientation Program நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாநகரில் பல்வேறு தனியார் பேருந்துகளில் ஒவ்வொரு விதமாக பயண கட்டணம் வசூலித்து வருவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் இதற்கு முன்பும் பல்வேறு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதிலளித்தார்.





