• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தரமான பொங்கல் பரிசு – முதல்வர் உத்தரவு

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாடும் வகையில், கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தேன். இதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் – நமது அரசுக்குப் பெரும் நிதி நெருக்கடி நிலவி வரும் இச்சூழலிலும் மக்களின் நலன்கருதி 1,297 கோடி ரூபாய் செலவில் இத்தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாகச் சென்று நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்தேன். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். எனவே, இந்தப் பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்வித புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு, நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.