வேடசந்தூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கரூர் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீர் உந்து கிணறு அமைக்கப்பட்டு சக்தி வாய்ந்த மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு குழாய் மூலம் பாளையம், குஜிலியம்பாறை, திண்டுக்கல், எரியோடு, வேடசந்தூர், வடமதுரை, நத்தம், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் கிராமப் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் குழாய் உடைந்து சாலையில் வீணாக குடிநீர் செல்வதை பார்க்கும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து குஜிலியம்பாறை இந்து முன்னணி நிர்வாகி கணேசன் கூறியதாவது: தரமற்ற குழாய் அமைக்கப்பட்டு உள்ளதால் எங்கள் பகுதியில் அடிக்கடி காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி செல்வது தொடர் கதையாக உள்ளது.
குஜிலியம்பாறையில் இன்று காலை 11:00 மணிக்கு குழாய் உடைந்தது. தொடர்ந்து பல மணி நேரம் வீணாக சாலையில் குடிநீர் செல்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களிடம் தகவல் கூறியும் குழாயில் வீணாகச் செல்லும் குடிநீரை அடைப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு புதிய குழாய் அமைத்து பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்



