• Mon. May 13th, 2024

அரசு பணத்தை வீணாக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.., நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

ByKalamegam Viswanathan

Jul 1, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து பாசன தேவைக்காக ஊற்று கால்வாய் மூலம் சுமார் 300 ஏக்கர் பாசனம் செய்து வந்தனர். கடந்த 30 வருடங்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தன போக்கால் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள ஊற்று கால்வாய் முற்றிலுமாக சேதம் அடைந்து மூடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்தப் பகுதி விவசாயிகள் அருகிலுள்ள குடமுருட்டி ஓடை வழியாக வரும் கழிவு நீர் வாய்க்கால் மூலம் பாசன தேவையை சரி செய்து வந்தனர். ஆனால்.கடந்த சில ஆண்டுகளாக முள்ளிபள்ளம் ஊராட்சி மன்றத்தின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊற்றுக்கால்வாய் அவ்வப்போது தூர்வாரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது திடீரென பொதுப்பணித்துறை அதிகாரிகள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்த அதே இடத்தில் கால்வாயை தூர் வாருவதாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக பணி செய்து வருகிறார்கள். இதனை இப்பகுதி விவசாயிகள் மார்நாடு, அழகுமலை உள்ளிட்ட பலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடத்தில் சென்று பணிகளை செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து விவசாயி மார்நாடு கூறும் போது, மன்னாடிமங்கலத்தில் இருந்து பிரிந்து வரும் சுமார் 3 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊற்று கால்வாயை முறையாக தோண்டினால் தான் சுமார் 300 ஏக்கர் பாசனம் பெறும். கீழ் பகுதியில் உள்ள 500 மீட்டர் தூரம் மட்டும் தோண்டுவதால் எந்த ஒரு பிரதிபலனும் இல்லை. மாறாக அரசு பணம் தான் சுமார் 10 லட்ச ரூபாய்க்கு மேல் விரயம் ஆகும். மேலும் இந்த ஊற்றுக்கால்வாய் அவ்வப்போது ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களால் சரி செய்யப்பட்டு வருகிறது அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோண்டுவதால் ஏற்கனவே ஊராட்சி மன்றத்தால் பார்க்கப்பட்ட வேலையை திரும்ப பார்ப்பதால் அரசுக்கு தேவையில்லாத வீண் செலவு ஏற்படுவதோடு 100 நாள் வேலை பணிகளும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது இதனை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக முள்ளிப் பள்ளத்தில் உள்ள இந்த இடத்தினை ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெரும் ஊற்றுக்கால்வாயை மேம்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *