கம்பத்தில் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியை போலீசார் பறிமுதல் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கம்பம் நகராட்சிக்குட்பட்ட நந்தனார் காலனி உள்ளது. இங்கு மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். இவ்விழாவை அப்பகுதியில் வசித்து வரும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோவில் திருவிழா தொடங்கியது.

இதற்காக கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மற்றும் வீதிகளில் அலங்கார விளக்குகள் பந்தல்கள் அமைக்கப்பட்டும், ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு பக்தி பாடல்கள் ஒளிபரப்பு செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கோவில் திருவிழாவில் பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒளிபரப்பு செய்வதால் மாணவர்கள் படிப்பதற்கு சிரமம் அடைவதாக தேனி மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கம்பம் தெற்கு போலீசார் நேற்று இரவு பாடல்களின் சத்தத்தை கன்ரோல் செய்யும் ஆம்ப்ளிஃபையர் பெட்டியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். போலீசார் ஒலி பெருக்கி பெட்டியை திரும்ப தராததையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாரை கண்டித்து கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்சமயம் அதிக சத்தம் எழுப்பாத ஆம்ப்ளிபயரை பயன்படுத்தி பாடல்கள் இசைக்கவும், விழா முடிந்த பின்பு பறிமுதல் செய்யப்பட்ட ஆம்ப்ளிஃபையர் வழங்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.