மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகள் மற்றும் அதன் சுற்றியுள்ள தென்கரை முள்ளிபள்ளம் திருவேடகம் மேலக்கால் ஆகிய கிராமப் பகுதிகளிலும் தெரு நாய்கள் பொதுமக்கள் குழந்தைகள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாக திரிவதால் ஒரு வித அச்சத்துடன் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் வடக்கு தெரு பகுதியில் அதிகமான இறைச்சி கடைகள் இருப்பதால் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சர்வ சாதாரணமாக திரிகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தென்கரை உச்சமாகாளி அம்மன் கோவில் பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டமாக திரிகிறது. மேலக்கால் கச்சிராயிருப்பு பகுதியில் பல இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சாலையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு துரத்திக்கொண்டு செல்வதால் குழந்தைகள் பொதுமக்கள் பயத்துடன் உள்ளனர்.
திருவேடகம் பள்ளிவாசல் பகுதியில் வெறி பிடித்த நாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது சோழவந்தானிலிருந்து மதுரை மற்றும் திருமங்கலம் செக்கானூரணி செல்லக்கூடிய முக்கிய சாலையாக உள்ள இந்த பகுதியில் திருவேடகம் பள்ளிவாசல் அடுத்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை சுமார் 500 மீட்டர் தூரம் நாய்கள் துரத்தி செல்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தச்சம்பத்து பகுதியிலும் சாலைகளில் செல்பவர்களை தெரு நாய்கள் குறைத்துக் கொண்டே உள்ளது. இதனால் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர் தெருநாய்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு வெறி நாய்களாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தென்கரை வைகை பாலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக இறைச்சி கடைகளின் முன்பு தெரு நாய்கள் கூட்டமாக படுத்து உள்ளது.

அந்த பகுதியில் செல்பவர்களை விரட்டுவதும் குறைப்பதுமாக அச்சுறுத்தி வருகிறது. ஆகையால் இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்கள் கடை முன்பு தெரு நாய்கள் கூட்டமாக வருவதை தடுக்க வேண்டும். இதற்கு சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



