மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்வார்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி காலையில் எழுந்து விவசாய கூலி வேலைக்கும் வெளியூரில் வேலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் தார் சாலை போடப்பட்டது. இப்போது அந்த சாலையின் நிலை சொல்ல முடியாத அவல நிலையில் இருந்து வருகின்றன. உள்ளூரில் இருந்து வெளியூர் செல்பவர்களும், வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு வரக்கூடியவர்களும் மற்றும் பள்ளிக்கூடங்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சாலையில் தான் பயணம் செய்ய வேண்டியதாக உள்ளது. சால்வார்பட்டியிலிருந்து முடுவார்பட்டிவரை இரண்டு கிலோமீட்டர் செல்லும் சாலை முற்றிலுமாக பெயர்ந்து பெயரளவில் மட்டும் சாலையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை புதிதாக போட்டதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமென்றால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அரசும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்தி, இந்த சாலையை உடனடியாக புதிய தார் சாலை அமைத்து தர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டனர்..