பற்றியெரிந்த பாராளுமன்றம்…
ஓட்டமெடுத்த பிரதமர்
நேபாளத்தில் என்ன நடக்கிறது?
ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தால் நேபாள பிரதமர் ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடிவிட்டார். நேபாளம் எங்கும் போராட்ட நெருப்பு இன்னும் ஓயவில்லை.
இந்தியாவின் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவின் வீதிகளை நேபாள இராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த போராட்டங்கள் ஆட்சிக்கு எதிரான முழுமையான பொதுக் கிளர்ச்சியாக விரிவடைந்தன.
பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் மேலும் கொந்தளித்தனர். அவர்கள் நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு தீ வைத்தனர். அதே நேரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளையும் தீக்கிரையாக்கினர்.
இருப்பினும், ஒலி இனி பிரதமராக இல்லாததால், நேபாளத்தின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. எனவே தற்போது நேபாளத்தில் யார் பொறுப்பில் உள்ளனர் – அடுத்து என்ன நடக்கும் என்ன கேள்விகள் சூடுபிடித்துள்ளன.
நேபாளத்தில் என்ன நடந்தது?
நாட்டில் நடக்கும் ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும், “நேப்போ குழந்தைகள்” என்று அழைக்கப்படும் நேபாள அரசு அதிகாரிகளின் குழந்தைகள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை முறையை ஆன்லைனில் பதிவு செய்வதை எதிர்த்து சமூக தளங்களில் கடுமையான கருத்துகள் மக்களால் வைக்கப்பட்டன. அதனால் அரசு சமூக தளங்களை முடக்கியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
செப்டம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே, ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தடுப்புகளை உடைத்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அதிகாரிகள் உத்தரவிட்ட ஊரடங்கு உத்தரவை சிலர் மீறினர். இறுதியில் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை, நேபாளத்தின் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இருப்பினும், போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி, நாட்டின் முன்னணி தினசரி செய்தி ஊடக அமைப்பான காந்திபூர் பப்ளிகேஷன்ஸ் அலுவலகத்துடன் சேர்த்து நாடாளுமன்றம் உட்பட அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
கடந்த ஆண்டு நான்காவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலி, தனது ராஜினாமாவை அறிவித்தார். நேபாளத்தில் உள்ள மற்ற அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
தீப்பிழம்புகள் மற்றும் கும்பல் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நேபாள அமைச்சர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் வெளியேற்ற வேண்டியிருந்தது. போராட்டக்காரர்களும் சிறைகளுக்குள் நுழைந்து கைதிகளை விடுவிக்கத் தொடங்கினர்.
நேபாள காவல்துறையினரால் அதிகரித்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், ஜனாதிபதி ராம் சந்திர பவுடலால் ராணுவம் தெருக்களுக்கு வரவழைக்கப்பட்டது.
இராணுவத்தின் பணி சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது மட்டுமே, பிரதமர் ஒலின் ராஜினாமாவால் ஏற்பட்ட நிர்வாக இடைவெளியை நிரப்புவது அல்ல.
இந்நிலையில் நேபாளத்தில் ஒரு இடைக்கால அரசாங்கம் அமையுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு நேபாள இராணுவம் போராட்டக்காரர்களை அழைத்துள்ளனர், மேலும் ஜனாதிபதி அந்த உரையாடலின் ஒருங்கிணைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.
ஆனால் முதலில், 3,200க்கும் மேற்பட்ட இளம் நேபாளிகள் தற்போது சமூக ஊடக செய்தி தளமான டிஸ்கார்டில் ஒரு ஆன்லைன் விவாதத்தில் கூடி, “பேச்சுவார்த்தையில் யார் அதிகாரப்பூர்வமாக பங்கேற்பார்கள், என்னென்ன பிரச்சினைகள் விவாதிக்கப்படும்” என்று விவாதிக்கின்றனர்,
போராட்டக் காரர்கள் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும், ஆறு மாதங்களுக்குள் அல்லது அதிகபட்சம் ஒரு வருடத்துக்குள் புதிய தேர்தல் நடக்க வேண்டும். பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நேபாளில் தீவிர்மாக நடைபெற்று வருகின்றன.
நேபாளம் நமது அண்டை நாடு என்பதால், இந்தியா உன்னிப்பாக நிலைமையை கவனித்து வருகிறது.
