வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக வெற்றி கழகத்தினர் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.