கரூர் மாவட்டத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகங்களில் அலுவலர்களின் ஒரு நாள் தற்செயல் விடுப்பின் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்களுக்காக பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து நிலையான காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைதுறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணி பாதுகாப்பு அளித்திட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிட சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வருவாய்த் துறையில் பணிபுரியும்

அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுவது தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வது தொடர்பாகவும், ஏற்கனவே அரசு செயலாளரிடம் முறையீடு அளித்துள்ள நிலையில், இதற்கான தீர்வினை விரைந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.