• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குஜராத் மோர்பி செல்கிறார் பிரதமர் மோடி…

குஜராத் மோர்பி தொங்கு பால விபத்தில் காயமடைந்தவர்களை பார்ப்பதற்காக பிரதமர் மோடி அங்குள்ள மருத்துவமனைக்கு நேரில் வர உள்ளார். இதனால் அந்த மருத்துவமனையில் அழுக்கு, தூசு படிந்த இருக்கைகள், துரு பிடித்த பெட்களை புதுப்பிக்கும் பணிகள் நேற்று இரவு மின்னல் வேகத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள முச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கேபிள் பாலம் உள்ளது.
100 ஆண்டுகள் பழமையான கேபிள் பாலத்தில் சமீபத்தில் தான் புனரமைப்பு பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.
சுற்றுலாத்தளமாகவும் இந்த பாலம் அமைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்காக டிக்கெட்டுகளும் வசூலிக்கப்படுகிறது. 1.25 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அன்றைய தினம் மாலையில் நடைபெற்ற ஒரு கோர விபத்துதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்தது.
கேபிள் பாலத்தில் சென்று கொண்டிருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டிருந்தனர். இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக அந்த பாலத்தில் நின்றுகொண்டிருந்தனர். இதில் திடீரென பாலம் அறுந்து விழுந்ததால் பாலத்தில் நின்றிருந்த மக்கள் அப்படியே ஆற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடினர். சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நீச்சல் அடித்து பலர் கரையை வந்தடைந்த போதிலும் 150 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பலர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த துயர சம்பவம் நடைபெற்றதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. எனினும் உண்மை நிலவரத்தை கண்டறிய 5 பேரைக் கொண்ட உயர்மட்ட சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச்சட்டம் 304, 308, 114- உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும்.. காயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அதேபோல், காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க பிரதமர் மோடி மோர்பி நகருக்கு இன்று வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மோர்பி நகரில் உள்ள நிவிணிஸிஷி என்ற அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள வார்டில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இந்த மருத்துவமனைக்கு நேரில் வர உள்ளதால், மருத்துவமனையை புதுப்பிக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அழுக்கு, தூசு படிந்த இருக்கைகள், துரு பிடித்த பெட்கள் என அனைத்தையும் மாற்றி பள பளவென புதிதாக்கும் பணியில் விடிய விடிய ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
பிரதமர் மோடி வருகை தர உள்ளதால் இந்த பணி நடப்பதாகவும்… அப்போ இதற்கு முன்பாக இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் நிலை எப்படி இருந்து இருக்கும்? என்று யோசித்து பாருங்கள் எனவும் சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் எழாமல் இல்லை.