• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு..,

BySeenu

Jan 28, 2026

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கோவையில் பிராய்லர் கோழி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில்

“விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு, இந்த பிரச்னையை தேவையற்ற விதத்தில் பெரிதாக்கி வருகின்றனர். உண்மையில், 90 சதவீத கறிக்கோழி பண்ணையாளர்கள் கிலோவுக்கு ரூ.7.50 முதல் ரூ.12 வரை பெறுகின்றனர். கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கப்படுகிறது என்ற தகவல் முற்றிலும் தவறானது. வெறும் 5 சதவீத பண்ணையாளர்களே அந்த அளவிற்கு பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் தான் நாட்டிலேயே சராசரியாக அதிக தொகை கறிக்கோழி வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது உற்பத்தி 90 சதவீதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இயல்பாக ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஒரு ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாக உள்ளது. பண்ணையாளர்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை.

நாள்தோறும் 23 லட்சம் முதல் 25 லட்சம் வரை கறிக்கோழிகள் வழக்கம் போல் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ‘விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்’ என்ற பெயரில் தான் இந்த பிரச்னை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கு விரைவில் முடிவு காண வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட ஆலோசனைப்படி அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இது அரசு கொள்முதல் செய்யும் தொழில் அல்ல. ஒப்பந்த நிறுவனங்களும் பண்ணையாளர்களும் இடையிலான வர்த்தகமாகவே இது நடைபெறுகிறது. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே அரசு தலையிட முடியும்.

பண்ணையாளர்கள் தாங்களே சொந்தமாக கோழிகளை வளர்க்கிறோம் என கூறுகின்றனர். தற்போது கோழிக் குஞ்சுகளின் விலை ரூ.60-ஐ எட்டியுள்ள நிலையில், பலர் இந்தத் தொழிலில் புதிதாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த விவசாயியையும் வற்புறுத்தியோ, மிரட்டியோ இந்தத் தொழிலை செய்ய யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

மேலும், தென்னை நார் மஞ்சி விலையை குறைக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை சலுகை விலையில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பணியாளர்களும் ஒப்பந்த நிறுவனங்களும் இணைந்து முன்வைக்க வேண்டும்.
பண்ணைகளில் கோழிகளுக்கு தீவனம் அல்லது தண்ணீர் வைக்க வேண்டாம் என தவறான தகவல்களை பரப்பக் கூடாது. திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் கறிக்கோழி பண்ணையாளர்கள் அல்ல.
டிசம்பர் மாதமே வளர்ப்பு தொகையை ரூ.1 உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. கோடை காலத்தில் கூடுதலாக கிலோவுக்கு ரூ.1 வழங்கவும், விற்பனை விலை உயரும்போதும் அதேபோல் கிலோவுக்கு ரூ.1 அதிகரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 3 லட்சம் கோழிக் குஞ்சுகள் இறந்ததாக தகவல் உள்ளது. கோழிக் குஞ்சுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போதைய கறிக்கோழி விலை உயர்வு இந்த போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல; இது தற்காலிகமான ஒன்றே. விரைவில் நிலைமை சீராகும்.

சந்தை விலைகளில் முழுமையான கட்டுப்பாடு விதிக்க இயலாது. தமிழ்நாடு அதிக நுகர்வோர்களைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. தற்போதைய விலை உயர்வு படிப்படியாக குறையும்”. மேலும் தற்போது விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்பவர் மூலம் ரூ.20 வழங்க வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு வாய்ப்பே இல்லை தெரிவித்தனர்.