• Wed. May 1st, 2024

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்..!

Byவிஷா

Dec 21, 2023

நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும் வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி திரவுபதிமுர்மு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களை அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயலால் ஜெகதீப் தன்கர் கடும் அதிருப்தியில் உள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதையை பேணும்வகையில் இருக்க வேண்டும். அதுதான் நாம் பெருமைப்படும் பாராளுமன்ற பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அந்த பதிவில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *