• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

வன்னியர் சமூகத்து மக்களின் எதிர்ப்பு இருப்பதால் நடிகர் சூர்யா வீட்டுக்கு முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தி காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி அதற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதற்கு, தன் தரப்பு நியாயத்தை வெளியீட்டு இருந்தாரே தவிர சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் வன்னியர் சமூகத்தினர் மற்றும் பாமகவினர் சூர்யாவிற்கு எதிராக மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

சூர்யா நடித்த படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .சூர்யா எங்கே சென்றாலும் அவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நீண்ட நாட்கள் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த விவகாரம் கொஞ்சம் அடங்கியிருந்த நிலையில், சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளைக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் சூர்யா மன்னிப்பு கேட்டால் தான் அவரது படத்தை திரையிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் பாமக மாணவர் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் சூர்யா படத்தை திரையிடக்கூடாது என்று மிரட்டி வருவதாகவும் தகவல். இதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது . கருத்து சுதந்திரத்திற்கு ஏற்படும் மிரட்டலை தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கையாக நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.