

நடிகர் ரஜினிக்கு முதல் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த மதுரையைச் சேர்ந்த முத்துமணி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 63.
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிக்கு மதுரையில் 1976ம் ஆண்டு ரசிகர் மன்றம் நிறுவியவர் ஏ.பி.முத்துமணி.
அதுவே ரஜினிக்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் ரசிகர் மன்றம் ஆகும். தன்னை முதன் முதலில் ரசிக்க ஆரம்பித்த முத்துமணியுடன் ரஜினி அடிக்கடி போனில் உரையாடுவது வழக்கம்.
முத்துமணி, நுரையீரல் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு போன் செய்து நலம் விசாரித்ததோடு, அவரது மனைவிக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஏ.பி.முத்துமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துமணியின் மரணம் ரஜினி ரசிகர்கள் உட்பட ரஜினியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.