‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் போலீஸார் இன்று மீண்டும் விசாரணை நடத்தினர்.
தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் சென்றனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது 9 வயது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த வழக்கில் முன்னதாக திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிறுவனுக்கு தேவையான மருத்துவச் செலவுகளில் இருந்து இதர செலவுகளையும் தான் பார்த்துக் கொள்வதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார். மேலும் சிறுவனுக்கு சிங்கப்பூரில் இருந்து 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தயாரிப்பாளர் 50 லட்சம் ரூபாய் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வழங்கியது. மேலும் சிறுவனின் மருத்துவச் செலவுகளையும் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுனிடம் மீண்டு விசாரணை நடந்த சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் இன்று விசாரணைக்காக சென்றுள்ளார். அவரிடம் போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தினர்..