வருகிற நவம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி காவல்நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை வகித்து பேசினார்.
அவர் கூறியதாவது: “ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் முறையான சீருடை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுடன் கனிவும் மரியாதையும் காட்ட வேண்டும். எக்காரணம் கொண்டும் கடுமையான வார்த்தைகள் பேசக்கூடாது.
நகரின் முக்கியமான ரவுண்டானா பகுதியில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது. ரவுண்டானாவில் இருந்து ராக் ரோடு, சன்னதி தெருவிற்குள் ஆட்டோக்கள் செல்ல அனுமதி இல்லை. எனினும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இதற்கான அனுமதியை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வழங்குவார்கள்,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
“பழைய பஸ் நிலையம் மற்றும் சிலுவைநகர் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டண கழிப்பறை அருகில் மட்டுமே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டும். ஆனால் அங்கு நிரந்தர ஸ்டாண்ட் அமைக்க அனுமதி இல்லை.
வழி தெரியாமல் நிற்பவர்கள், குழந்தைகள் அல்லது உடன் வந்தவர்களைத் தவறவிட்டவர்கள் இருந்தால், ஆட்டோ டிரைவர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் தற்காலிக பூத்களுக்கு தகவல் தெரிவித்து உதவ வேண்டும்,” என்றார்.
இக்கூட்டத்தில் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களையும் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
சபரிமலை சீசனை முன்னிட்டு நகரத்தில் ஒழுங்கும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.











; ?>)
; ?>)
; ?>)