• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

திருந்திய(?) வரிச்சியூர் செல்வத்தை

ByS.Ariyanayagam

Sep 29, 2025

தெருவில் இழுத்துவிடும் போலீஸார்!

உடம்பு நிறைய நகைகளோடு தோன்றும் ரவுடி வரிச்சியூர் செல்வம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்   கொள்வது வழக்கம். அந்த வகையில் இப்போது மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார் வரிச்சியூர் செல்வம்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் திமுக ஒன்றிய செயலாளர் கதிரவன் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கேரள நபர், திண்டுக்கல்லில், கடந்த 2012 ல் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  13 வருடங்களுக்கு முந்தைய இந்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் தற்போது மீண்டும் திண்டுக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்த நடராஜன் மதுரையில் நடராஜன் நகரில் வசித்தார். 2012 பிப்.,12ல் விரகனூர் அருகே, ‘சி.பி.ஐ., அதிகாரிகள்’ என்று கூறி, சிலர் அவரை கடத்தி, ரூ.2 கோடி கேட்டனர்.

அவர்களிடமிருந்து தப்பிய கதிரவன், பிப்.,15ல், மதுரை எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, ரித்தீஷ் எம்.பி.,யிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைமையிலான கும்பல், கதிரவனை கடத்தியதாகவும், திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதாகவும், மதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவ்வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டார் வரிச்சியூர் செல்வம்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜேஎம் 2ல் நடைபெற்று வந்தது. இதில் தொடர்ச்சியாக வரிச்சியூர் செல்வம் ஆஜர் ஆகாததால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதனையடுத்து, வத்தலகுண்டு பகுதியில் வைத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறையினர் வரிச்சூர் செல்வத்தை கைது செய்தனர்.

இது குறித்து அரசியல் டுடே தரப்பில் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்கள், சென்னைமற்றும் கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிங்களிலும் தனது பெயரை தெரியவைத்து செவாக்குமிக்கவராக திகழ்ந்தவர் வரிச்சியூரான் என்ற வரிச்சியூர் செல்வம்.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வரிச்சியூர் செல்வம் கண்முன்னே அவரது தந்தை கருப்பையா அண்ணா பேருந்து நிலைய பகுதியில் சிலரால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மதுரை நீதிமன்ற பகுதியில் தந்தையை கொன்றவரை செல்வம் கொலை செய்தார். இதுதான் அவருக்கு முதல் கொலை. இதைத்தொடர்ந்து அவர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, ஆள் கடத்தல், மோசடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.

மதுரை மாநகர் மற்றும் சென்னை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் இவர்மீது வழக்குகள் இருக்கின்றன. சில வழக்குகள் தள்ளுபடி ஆன நிலையில், சில வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.

2003 முதல் மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் ரவுடி சரித்திர பட்டியலில் இடம்பெற்று தொடர்கிறார்.

பொதுவாக இவர், தடயமின்றி குற்றச்செயல்கள் புரிவதில்லை வல்லவர். பங்களா போன்ற ஆடம்பர வீடுகளில் வசிப்பது, விலை உயர்ந்த கார்களில் வலம் வருவதை விரும்புவார். தற்போது, இவரிடம் 8 கார்கள் உள்ளன. தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே உடல் முழுவதும் அதிக தங்க நகைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். தங்கத்தைவிட மனித உயிர் விலை மதிக்க முடியாதது எனக் கருதி கரோனா நேரத்தில் 12 பவுனில் முகக்கவசம் அணிந்து  வைரலானார்.

ஏதாவது சம்பவம் செய்துவிட்டு கேரளா, பெங்களூர், ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்று பதுங்குவார். சென்னையில் சினிமாத்துறையிலும் பைனான்ஸ் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தெல்லாம் செய்திருக்கிறார். ஒரு முறை மனைவி சித்ரா மூலம் நீதிமன்றத்தில் மனு செய்து, என்கவுன்டரில் இருந்து தப்பினார்.

’நான் இறப்பதற்கு பயப்படவில்லை. இருப்பினும் மனைவி, குழந்தைகளுடன் கொஞ்ச காலம் திருந்தி வாழவே விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பளியுங்கள்’ என 2006ல் காவல்துறையில் கடிதம் கொடுத்து இருக்கிறார்.

மேலும், ‘நானொரு டம்பி பீஸ் சார், ரவுடியோ, தாதாவோ கிடையாது. பேரக் குழந்தைகளுடன் தாத்தாவாகவே வசிக்கிறேன்’ என்றும் அவ்வப்போது கூறி வந்திருக்கிறார் வரிச்சியூர் செல்வம்.

இந்த நிலையில்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் தோற்க காரணமாக இருந்ததாக சந்தேகித்து குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், அவரது நண்பர் கொல்லப்பட்டனர்.

இதில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தனது கூட்டாளியான விருதுநகர் செந்தில்குமாரை கண்டம் துண்டமாக வெட்டி உடல் பாகங்களை ஆற்றில் வீசிய சம்பவத்தில் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

வரிச்சியூர் செல்வம் திருந்தி வாழ்ந்து வருவதாக கூறி வருகிறார். எனினும் சமீபத்தில் கூட கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இப்போது திண்டுக்கல்லில் ஒரு வழக்கில் பதுங்கியிருந்தவர் செப்டம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்; அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

வரிச்சூர்செல்வம் திருந்தி வாழ முயற்சித்தாலும் அவருக்கு நெருங்கிய ரவுடிகளும்… போலீசாருமே அவரை பகடைக் காயாக பயன்படுத்தி வம்பில் இழுத்து விடுகின்றனர்” என்றார்கள் போலீஸ் வட்டாரத்திலேயே.