• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கொல்லைக்காடு பகுதியில் விஷ வண்டுகள் பொதுமக்களை தாக்கியது…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சி கொல்லைக்காடு பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் குலதெய்வ கோவிலில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கிளம்பிய புகையால் அங்கிருந்த ஆலமரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனி மற்றும் கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் மரத்திலிருந்து வெளியேறி, அங்கு கூடியிருந்தவர்களை தாக்கியது.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராணி (வயது 53), பூங்கோதை (47) தனலட்சுமி (34),அம்பிகா (55), பழனியம்மாள் (52), சிறுவன் தனிஷ் (12), கரிஷ் (8), சஞ்சய் (3) உள்ளிட்ட 10 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் சினேகா பிரியதர்ஷினி தலைமையில், செவிலியர்கள் வனிதா, எஸ்தர் ராணி மற்றும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் இரவு 10 மணிக்கு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, ஒவ்வொருவருக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கினார். மேலும், மருத்துவரிடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் சீனிவாசனை தொடர்பு கொண்டு, விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஷவண்டுகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.