• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அரசு காரில் இன்பச் சுற்றுலா…

ByS.Ariyanayagam

Sep 15, 2025

புகார் வளையத்தில் போடி கமிஷனர்

மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய காரில், மக்கள் பணத்தில் கொடுக்கப்படும்  எரிபொருளில் கேரளாவுக்கு தனது குடும்பத்தினரோடு,  இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போடி நகராட்சி கமிஷனர் பார்கவி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி நகராட்சி கமிஷனர் பார்கவி. இவர் தற்போது தான் டிஎன்பிசி குரூப் 2 தேர்வில் தேர்வாகி நகராட்சி கமிஷனராகி உள்ளார்.

டிஎன்பிசி குரூப் 2 வில் மிக உயர்ந்த பதவியாக கருதப்படுவது முனிசிபல் கமிஷனர் பதவியாகும். இந்த பதவிக்கு வந்த சில நாட்களிலேயே மிகப்பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார் நகராட்சி கமிஷனர் பார்கவி.

நகராட்சி வாகனத்தை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு யாரும் பயன்படுத்தக் கூடாது. கலெக்டர் அலுவலகம் செல்லலாம், மதுரை மண்டல நகராட்சி இயக்குனர் அலுவலகம் செல்லலாம். ஆனால் அதை விட்டு தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் மூணாறுக்கு இன்பச் சுற்றுலாவுக்கு நகராட்சி வாகனத்தை அவர் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. அரசின் வாகனத்தில் ஊரு விட்டு ஊரே செல்லக்கூடாது என்ற நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் சென்றதாக

கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கடுமையாகியுள்ளது.

இது குறித்து இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன், மதுரை நகராட்சி மண்டல இயக்குனர் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார். அவரிடம்  அரசியல் டுடே சார்பில் பேசியபோது,’

“தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் பார்கவி. இவர் சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு அரசின் ஜீப் (TN60 Q 5418)  வாகனத்தை, விதி மீறலில், தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி, (சனி, ஞாயிறு) கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

தமிழ்நாடு மாநில  எல்லையிலும், கேரளா மாநில எல்லையிலும் உள்ள செக்போஸ்ட்டுகளிலும் உள்ள சிசிடிவி கேமிராக்களிலும் இந்த வாகனம் பதிவாகியுள்ளது.

தனது அரசு குடியிருப்பில்,  சொந்த வேலைக்காக, விதிமீறலில்,  ஒப்பந்த தூய்மைப் பணியாளர்  இருவரை, சொந்த வேலைக்கு  பயன்படுத்தி வந்துள்ளார்.

தமிழ்நாடு நகராட்சித்துறை இயக்குனரும், தேனி மாவட்ட ஆட்சித் தலைவரும், சொந்தப் பயன்பாட்டிற்கு, வெளிமாநிலத்திற்கு, கேரளாவிற்கு, அரசின் அனுமதியின்றி, அரசு வாகனத்தை  இயக்கிய, போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளர் பார்கவி மீது, விரைவான, முறையான  விசாரணைக்கு உத்தரவிட்டு, நடவடிக்கை எடுத்திட   வேண்டும்.

இதுமட்டுமல்ல…   அரசு குடியிருப்பில் சொந்த வேலைக்காக வைக்கப்பட்டிருக்கும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இருவரையும் சொந்தப் பணிக்காக பயன்படுத்தியிருக்கிறார்.

அவர்களை  விடுவித்து, தூய்மைப் பணியில் ஈடுபடுத்திட, தேவையான  நடவடிக்கை எடுத்திடவும் தமிழ்நாடு நகராட்சித் துறையும், தேனி மாவட்ட நிர்வாகமும்  முன்வர வேண்டும்” என்கிறார்.

இதுகுறித்து போடி நகராட்சி ஊழியர்கள் வட்டாரத்தில் பேசியபோது,

“ இளம் வயதில் வந்த நகராட்சி கமிஷனரை, சில சுகாதாரப் பணி அலுவலர்கள் தவறான பாதையில் திசை திருப்பி விடுகின்றனர். இன்னும் எவ்வளவு காலம் இவர் மக்கள் சேவையாற்ற வேண்டியுள்ளது என்பதை அறியாமல் சிலர் சொல்வதைக் கேட்டு நடப்பதால் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போகாத ஊருக்கு வழி சொல்பவர்கள் பேச்சைக் கேட்டு, போகக்கூடாது.  நகராட்சி வாகனத்தில் நகராட்சி கமிஷனர் சுற்றுலா  போய்விட்டு வந்தது தற்போது பிரச்சினையாகி உள்ளது.

அதிகாரத்தை பயன்படுத்தி பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியது உண்மையில் வருந்தத்தக்க விஷயம். இதற்கு உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் திருந்துவார்” என்றனர்.

இது குறித்து போடி நகராட்சி கமிஷனர் பார்கவியிடம் அரசியல் டுடே சார்பில் கேட்டபோது,  ”நகராட்சி வாகனத்தை நாங்கள் சொந்த பயன்பாட்டுக்கு

பயன்படுத்தவில்லை. இது ஒரு தவறான குற்றச்சாட்டாகும். மேலும் தூய்மை பணியாளர்களை நாங்கள் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக கூறுவதும் தவறாகும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் நடக்காத விஷயத்தை நடந்ததாக கூ றி பெரிதாக்குகின்றனர்” என்றார்.

இதுகுறித்து மதுரை நகராட்சி மண்டல இயக்குனர் முருகேசனிடம் அரசியல் டுடே சார்பில் விளக்கம் கேட்டோம்.

”போடி நகராட்சி பகுதியில் நடக்கும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு நடத்தினேன்.  போடி நகராட்சித் தலைவர் கடந்த செப் 06 ம்தேதி சனிக்கிழமை காலை ஏழு  மணியளவில், செக் போஸ்ட்டை  தாண்டி, கேரளாவுக்கு, மூணாறுக்கு சென்றதாகவும்.  மேற்படி அரசு ஜீப் (TN60 Q 5418) வாகனத்தை பயன்படுத்தியதாகவும். மீண்டும் கடந்த செப்.07ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை நான்கு மணியளவில், கேரளா செக் போஸ்ட்டை தாண்டி தமிழ்நாட்டுக்கு, போடிநாயக்கனூருக்கு வந்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகார் எழுத்துப்பூர்வமாக வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தூய்மை பணியாளர்களை யார் தவறாக பயன்படுத்தி இருந்தாலும் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”  என்றார்.

அரசுத் தேர்வு எழுதி வேலைக்கு வரும் பார்கவி போன்ற இளைஞர்கள் மக்களுக்கு பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால்… தவறான வழிகாட்டுதலில் ஆரம்பத்திலேயே தடம் மாறலாமா?