15 வயதியில் இருந்து பிக்பாக்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் வக்கீலுக்கு பணம் கொடுக்க வக்கீலிடம் செல்போன் திருடிய போது போலீசார் கைது செய்தனர்.
ஊட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (75). வக்கீலாக பணி புரிந்து வருகிறார். அவர் கடந்த 5ந் தேதி கோவை வந்து இருந்தார். கோவையில் டவுன் ஹால் பி.பி. வீதியில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு ஊருக்கு செல்வதற்காக பிரகாஷம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் ஏறினார். அப்போது அவரது அருகில் இருந்த ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து ஹரிஹரன் பெரியகடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து, செல்போன் திருடனை தேடி வந்தனர். மேலும், செல்போன் சிக்னலை வைத்து பார்த்த போது அந்த நபர் டவுன்ஹால் பகுதியில் சுற்றித் திரிந்தது தெரிந்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று அந்த நபரை தேடினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஹரிஹரனிடம் செல்போனை திருடியவர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர் கோவை புளியகுளத்தை சேர்ந்த மணிகண்டன் (47) என்பது தெரியவந்தது. விசாரணையில் திருட்டு குறித்து மணிகண்டன் கூறிய காரணம் போலீசாருக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது :-
திருட்டில் ஈடுபட்ட மணிகண்டன் தனது 15 வயதில் இருந்து திருட்டில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார். அவர் மீது கோவை மாட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்கு உள்ளது. பல வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமான ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், டவுன் ஹால் பகுதிகளில் செல்போன், மணி பர்சையை திருடி வருவதை தொழிலாக வைத்த உள்ளார். சிறையில் இருந்து வந்து சில நாட்களில் மீண்டும் ஏன் திருட வந்தாய் என கேட்ட போது அவர் கூறிய காரணம் சிரிபை ஏற்படுத்தியது.
கோர்ட்டில் 15 வழக்குகளுக்கு வாயிதா நடந்து வருவதாகவும், தனது வழக்கை நடத்தி வரும் வக்கீலுக்கு பணம் கொடுக்க பணம் இல்லாததால் செல்போனை திருடியாதாகவும் தெரிவித்தார். அப்போது நாங்கள் அவரிடம் வக்கீலுக்கு பணம் கொடுக்க நீ திருடிய செல்போனும் வக்கீலுடையது என்று கூறினோம். மணிகண்டன் செல்போனை விற்க கொண்டு செல்லும் போது நாங்கள் அவரை கைது செய்து விட்டோம். அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பு உள்ள செல்போனை மீட்டு விட்டோம். மக்கள் பொது இடங்களில் செல்லும் போது தங்களது உடமைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதை அடுத்து போலீசார் கைது செய்த மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.