திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்
வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.மாவட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து ஒருமையில் பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
அண்ணா பிறந்த நாள் விழாவில் பாகம் வாரியாக கூட்டம் நடத்த வேண்டும், முப்பெரும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை முதலமைச்சர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழங்கி உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரை ஒருமையில் பேசுவது வருந்ததக்கது. எதிர்க்கட்சியினர் ஆளுங்க கட்சியினரை விமர்சித்து பேசுவது வழக்கமான ஒன்று என்ற போதிலும், வரைமுறை மீறி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

துணை முதல்வர் எது பேசினாலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி கவுண்டர் கொடுக்கிறார். துணை முதலமைச்சர் இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவே இல்லை, அதற்குள் கவுண்டர் கொடுப்பது எதிர்க்கட்சியினருக்கு துணை முதல்வர் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பது தெரிகிறது.
டெட் தேர்வு தீர்ப்பு விவகாரம் தொடர்பாக முழுமையாக ஆராயப்படும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கைவிட்டுவிடாமல் அவர்களுக்கு எந்த அளவிற்கு நன்மை செய்ய முடியுமா அதை தமிழக அரசு செய்யும். என்னை சந்தித்த எந்தவொரு ஆசிரியர் சங்கத்தினரும் டெட் தேர்வு எழுத மாட்டோம் என கூறவில்லை, நாங்கள் எழுதுவதற்கு காத்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொன்னார்கள்,

உடனடியாக நான் கவலைப்படாதீர்கள் அதற்கான சட்ட ரீதியான முன்னெடுப்புகளை எடுத்து தான் வருகிறோம். மற்றொரு பக்கம் அதை டெட் தேர்வாக நடத்தலாமா அல்லது சிறப்பு டெட் தேர்வாக தலைமை ஆசிரியர்களுக்கு நடத்திய தேர்வு போல நடத்தலாமா, அவ்வாறு முடிவு எடுத்தால் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் மீண்டும் இது பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்படுமா என்றெல்லாம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
ஆசிரியர்களுக்கு எது நன்மையோ அதை இந்த அரசு செய்யும்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அரசு பள்ளியில் விடுமுறை அளித்து அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாவட்ட கல்வி அலுவலர் தன்னிச்சையாக இதை செய்துள்ளதாக தெரிகிறது. இதுபோல் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடமும், கல்வி அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன். விடுமுறை நாட்களில் மட்டும் தான் அங்கு முகாம்கள் நடத்த வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளேன்.
ஒவ்வொரு ஆசிரியர் சங்கமும் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றன. தற்பொழுது முதலுக்கே மோசம் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பணிக்கே ஆபத்து என டெட் தேர்வு குறித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதை முதலில் சரி செய்ய வேண்டியது தான் முக்கிய பணியாக உள்ளது.
விஜய் இரண்டு மாநாடுகள் நடத்திய பின்பு தற்பொழுது முதன் முதலாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.அவர் பிரச்சாரம் செய்து அதில் என்ன பேசுகிறார் என்பதை பார்க்க வேண்டும்.
துணை முதல்வர் இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவே இல்லை, அவர் ஒவ்வொரு பகுதியாக இளைஞர் அணி நிர்வாகிகளை தான் சென்று சந்திக்க உள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் தான் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்குகிறார்கள்.யாரையும் தடுத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு கிடையாது என்றார்.