தேனியில் அடகு வைத்த நகையை மீட்டெடுக்க சென்ற போது நகை ஏலம் போய் விட்டதாக போலி சீட்டு தயார் செய்து அடகு கடை உரிமையாளர் 75 பவுன் நகை மோசடி செய்துள்ளார்.
பாதிக்கபட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், அடகு கடை உரிமையாளருக்கு ஆதரவாக திமுக நிர்வாகி உட்பட ஏராளமானோர் வழக்கை வாபஸ் வாங்க கோரி, தன்னை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி பெண் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைகுண்டு பகுதிக்கு உட்பட்ட மூலகடையை சேர்ந்தவர் சௌமியா. இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பண தேவைக்காக கோபிநாத் ஜஸ்டின் என்பவரின் நகை அடகு கடையில் தனது 75 பவுன் நகைகளை அடகு வைத்து 24 லட்சம் பணம் பெற்றுள்ளார்.





இந்நிலையில் மூன்று மாதம் கழித்து அடகு வைத்த நகை மீட்டெடுக்க சென்ற போது, வங்கியில் தனது மனைவி பெயரில் அடகு வைத்திருப்பதாகவும், தற்போது தர முடியாது என்று தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இறுதியில் நகை முழுவதும் ஏலம் போய்விட்டது என போலி சீட்டு காண்பித்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கடமலைகுண்டு போலீசார் விசாரணைக்கு அழைத்த போது, போலியாக நகை ஏலம் சீட்டு காண்பித்து விசாரணைக்கு வரமால் தன்னிடம் 2.5 லட்சம் பணம் தருவதாக கூறி, வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என மிரட்டியதாக சௌமியா குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும் பல நபர்கள் தன்னிடம் ஃபோன் செய்து வழக்கை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டி உள்ளனர் என்று தெரிவித்தார்.


இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நான் வீட்டில் தனியாக இருந்த போது திமுக வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சேர்மலை என்பவர் அடியாட்களுடன் வந்து தன்னை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என கூறி மிரட்டல் விடுத்ததாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை இல்ல என்றும் கூறி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சௌமியா புகார் அளித்துள்ளார்.


தனது நகையை மீட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
