நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார். பின்னர், பிப்ரவரி 13-ம் தேதி வரை நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நடந்து முடிந்த இரு அவைகளும், மார்ச் 10-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன. இந்த சூழலில். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) தொடங்குகிறது.
இந்த தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கூட்டத் தொடரின்போது, குடியேற்றம் – வெளிநாட்டினர் சட்ட மசோதா, வங்கி திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா ஆகியவற்றை நிறைவேற்றவும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, மும்மொழி கொள்கை, மக்களவை தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







; ?>)
; ?>)
; ?>)