• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் தொடர் போராட்டம்

ByKalamegam Viswanathan

Nov 8, 2024

பரவை அருகே சாதி சான்றிதழ் கேட்டு இரண்டாவது நாளாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் சமுதாயப் பாட்டு பாடி பெற்றோர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்தி நகர். பரவை பேரூராட்சிக்குட்பட்ட இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கடந்த ஆண்டு வரை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களை கூறி மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு இந்து காட்டுநாயக்கன் என்ற சான்றிதழ் தர மறுப்பதாக கூறப்படுகிறது

இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இந்து காட்டுநாயக்கன் சான்றிதழ் எனும் (ST) பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நேற்று முதல்வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பாட்டு பாடி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சத்தியமூர்த்தி நகர் கிராம மந்தையில் தங்களது குழந்தைகளுடன் கூடியுள்ள 500க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் இன மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் தங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற பரிசு கோப்பைகளையும் கிராம மந்தையில் பொதுமக்கள் பார்வைக்கு எடுத்து வைத்து தங்கள் இனம் தொடர்பான பாடல்களை பாடினர்.

தங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்துள்ள போராட்ட குழுவினர் அடுத்த கட்டமாக மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது