

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா 3-வது அலைக்கு மத்தியில் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு நாளில் வெவ்வேறு ஷிப்டுகளில் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23 பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று காகிதமில்லா முறையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி அன்று காகிதமில்லா முறையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். கைபேசி செயலியில் பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தின் பரிந்துரைத்துள்ள படி முழுமையாக பார்வையிடலாம்.
ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
