பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘புரயான் உல் மசூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு ‘அழிக்க முடியாத சுவர்’ என்று அர்த்தம்.

பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக நான்கு பாகிஸ்தான் விமானப்படை தளங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
காஷ்மீர் எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் விமானங்கள் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதாகவும் (டாக் ஃபைட்), பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டு போர் விமானங்கள் இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் இராணுவ லாஞ்ச் பேட்கள் இந்திய தாக்குதலில் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான், சகாலாவில் உள்ள முரித் மற்றும் ஜாங்கில் உள்ள ரஃபீகி விமானப்படை தளங்களில் தாக்குதல் நடந்ததை பாகிஸ்தான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் வான்வழி முழுமையாக மூடப்பட்டது.
இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் நூர் கான் விமானப்படை தளம் அமைந்துள்ளது. தாக்குதலை தொடர்ந்து நூர் கான் விமானப்படை தளத்தில் தீப்பிடித்ததின் காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்களால் வெளியிடப்படுவதாக தகவல். ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
முன்னர் சால் விமானப்படை தளம் என்று அறியப்பட்ட நூர் கான் பாகிஸ்தானின் முக்கியமான விமானப்படை தளங்களில் ஒன்றாகும். காஷ்மீரின் ரஜௌரியில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் கூடுதல் மாவட்ட வளர்ச்சி ஆணையர் ராஜ் குமார் தாப்பா கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் அனைத்து விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதல்களுக்காக பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் மறைவாக பயன்படுத்துகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளது. ‘நோட்டிஸ் டு ஏர்மென்’ (NOTAM) மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தும் போது வான்வெளியை திறந்து வைத்திருப்பது சர்வதேச விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலானது என்று இந்தியாவும் குற்றம் சாட்டியிருந்தது.