• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 9, 2025

புத்திகூர்மை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாகவும் இருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான் ”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” என்று சிறுவன் பதில் அளித்தான். உடனே சிறுவனின் தந்தையான அறிஞர் திகைத்தார்!
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!