• Sat. Feb 28th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மூளை சாவடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..,

ByKalamegam Viswanathan

Feb 28, 2026

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பாலு (17 வயது), கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர் அண்ணா நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில் தலைக்காயம் அடைந்தார். அவசர சிகிச்சைக்காக பள்ளபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட அவர், பிறகு, நவீன சிகிச்சையின் பொருட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அவசர விபத்து சிகிச்சைப்பிரிவில் உள்நோயாளியாக பிறந்த பிப்ரவரி 24ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு தலைக்காயப்பிரிவில் சிறப்பு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இறந்த பாலுவின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதனை அடுத்து அவரது தந்தை முருகனின் ஒப்புதல் பெறப்பட்டது. பிப்ரவரி 27 ஆம் தேதி பாலுவின் உடலில் உள்ள உறுப்புகள் அகற்றப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் மற்றும் இருதயமும், திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு கல்லீரலும், இரண்டு சிறுநீரகங்கள் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் கூறுகையில், தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வுக்குப் பின் அரசு இராஜாஜி மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக இறுதி மரியாதை செய்யப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட நபரின் உடல் உறுப்பு தானத்தால் ஏழு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகத்திடம் அன்னாரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்கண்ட நோயாளியின் உறவினர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அரசு இராசாசி மருத்துவமனை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.