• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு..,

ByS. SRIDHAR

Nov 7, 2025

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமைய இருக்கும் தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 13வது நாளாக பிசானத்துர் கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் அப்பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் நம்பியுள்ள தங்கள் கிராமம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை கிராமத்திற்கான விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றதாகவும் மேலும் தங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் தான் கந்தர்வக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 36 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதாகவும் தற்போது விளைநிலத்திற்கு அருகாமையிலேயே மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கொண்டு வந்தால் சுற்றுச்சூழல் விவசாயம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதனால் ஒருபோதும் தங்கள் பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை அமைக்க விடமாட்டோம் என்று கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் 13 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் கிராம மக்களோடு புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் காவல்துறையினர் பாதுகாப்போடு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், அனைத்து கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் அதேபோல் போராட்டக் குழுவினர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அருணாவை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் கொடுத்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ளாத கிராம மக்கள் எழுத்துப்பூர்வமாக தங்கள் பகுதிக்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை வராது என்று தெரிவித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக இந்த பேச்சுவார்த்தையானது வருவாய்த்துறையினரால் நடத்தப்பட்டது.

அப்போது இந்த பேச்சு வார்த்தைக்கு உடன்படாத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் அவர்கள் எதற்காக இந்தப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறி எழுத்துப்பூர்வமாக தங்கள் பகுதியில் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படாது என்று உத்தரவாதம் கொடுக்கும் வரை ஒருபோதும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி திட்டவட்டமாக தெரிவித்ததால் வருவாய்த்துறை என நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் காவல் துறையினர் அங்கிருந்து சென்றனர்.