• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு..!

Byவிஷா

Dec 11, 2023

கனமழை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று டிசம்பர் 11ம் தேதி முதல் வழக்கம் போல் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. முன்னதாக முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அனைத்து பள்ளிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என 4 மாவட்டங்களையும் புரட்டிப் போட்டு விட்டு மிக்ஜாம் புயல் கடந்து சென்றுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் இன்னும் முழுவதுமாக குடியிருப்பு பகுதிகளில் இருந்து வடியாத காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் கனமழை காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கியுள்ளது. நீர் அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகல் பாராது செய்து வருகிற போதிலும் இன்னும் வெள்ளம் பல பகுதிகளில் வடியவில்லை. மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை தமிழக அரசு அதிகாரிகள் என பலரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் புயலால் சேதமடைந்த பள்ளி, கல்லூரிகளை சீரமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் அப்பணிகள் முடிக்கப்படவுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.