மதுரை மாநகராட்சி ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைகள் மாணவர், மாணவிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி அனுப்பானடி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, திரௌபதியம்மன் எண்.2 ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் மானகிரி ஆரம்பப்பள்ளி, செனாய்நகர் நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தூய்மைப் பாரத இயக்கத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட கழிப்பறை கட்டிங்களை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஆணையாளர் சித்ரா விஜயன்,துணைமேயர் தி.நாகராஜன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவுகள் வழங்கப்படுகிறது.
மேலும் மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், நூலக கட்டிடம், அறிவியல் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.88 அனுப்பானடி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், திரௌபதியம்மன் எண்.2 ஆரம்பப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் மாநகராட்சி மானகிரி ஆரம்பப்பள்ளியில் தூய்மைப் பாரத இயக்கம் திட்டத்தின்கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் 12 கழிப்பறைகள், செனாய் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 4 கழிப்பறைகள் என மொத்தம் ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டிடங்களை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துணைமேயர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன், உதவி ஆணையாளர் மணிமாறன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் பிரேமா,வசந்தாதேவி மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.