• Sat. Apr 27th, 2024

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் இங்கு தொழில் துவங்க வருவார்கள் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி…

BySeenu

Oct 27, 2023

தமிழகத்தில் எங்குமே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பொறுப்பு முழுவதும் அவர்கள் கையில் உள்ள போது ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு தொடர்பாக அமைச்சர் ரகுபதி இது போன்ற கருத்தை சொல்லி இருக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி ஆர் ஜி அருண்குமார் ,ஏ கே செல்வராஜ், தாமோதரன், கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த வேட்பாளரை அறிவித்தாலும் அந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றார். தற்போதுள்ள திமுக அரசு தமிழகத்திற்கு எந்த திட்டமும் தரவில்லை என்றும் கோவை மாவட்டத்திற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்த திட்டமும் தரவில்லை என்றும் கூறியதுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதும் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் பொழுதும் கேட்ட திட்டங்கள் அனைத்தையும் தந்ததாகவும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கி துவக்கி வைத்த பணிகள் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என விரும்புவதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். கோவை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக குறிப்பிட்ட அவர், தமிழகம் முழுவதும் மோசமான சூழ்நிலை நிலவுவதாகவும் சொத்து வரி உயர்வு ,மின் கட்டண உயர்வு என மக்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் எந்த பணியும் நடைபெறுவதில்லை எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சட்டங்களை கடுமையாக மாற்றி எந்த பணியும் நடைபெறாமல் இருப்பதால் மக்கள் சிரமத்தில் இருப்பதாகவும் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம் எந்தத் திட்டங்கள் கேட்டாலும் கிடைத்தது என்ற நிலையில் மக்களைப் பற்றி சிந்தித்து மக்களுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றிய ஒரே முதலமைச்சர் எடப்பாடியார் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அமைச்சர் ரகுபதியின் கருத்து குறித்து பேசிய அவர், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதி எது என்பதை பார்க்க வேண்டும் எனவும் அங்கு மட்டும் இன்றி சட்டம் ஒழுங்கு எங்குமே சரியில்லை என்றும் விமர்சித்தார்.தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவதால் அரசு அதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இது போன்ற பதிலை அவர்கள் சொல்லக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.பொறுப்பு முழுவதும் அவர்களுக்கு இருக்கும் சூழலில் காவல்துறையை முதலமைச்சர் வைத்திருப்பதாகவும் அதிமுக ஆட்சியில் காவல்துறை கட்டுப்பாடுடன் இருந்ததுடன் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததாகவும் குறிப்பிட்டார்.சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் தான் இங்கு தொழில் துவங்க வருவார்கள் எனும் நிலையில் இங்கு மோசமான சூழல் இருப்பதாகவும் இதற்கு உடனடியாக நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்றும் எஸ் பி வேலுமணி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *