• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாதம் ஒரு கோடி… தலை சுற்ற வைக்கும் ரேஷன் வசூல்!

ByRadhakrishnan Thangaraj

Oct 15, 2025

ஏழைகள் வயிற்றில் அடித்து மாதம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 41 ரேஷன் கடைகளும்,   கிராம பகுதிகளை  சேர்ந்து 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன.

இராஜபாளையம் PACR  சாலையில்  Q 1066 இராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிமிடெட் என்ற பெயரில் பாரதி நகரில் செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் இருந்துதான், இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கடையிலும் விற்பனையாளர்கள் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் Q 1066  இராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை

பண்டகசாலை (SO ) மேலாளர் கேட்பதாக ரேஷன் கடை விற்பனையாளர்கள் மத்தியில் குமுறல் குரல் நிலவுகிறது

ரேஷன் கடைகளில் மக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய அரிசி, சீனி, கோதுமை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய நுகர்வோருக்கு வழங்கும் பொழுது…  கட்டாயப்படுத்தி பொரிகடலை, டீ தூள், சோப்பு, ரவை, மைதா போன்ற பொருட்கள் வாங்க வேண்டுமென கடை விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

 விற்பனையாளர்களோ, மாசம் பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்டுவதற்காக,  இதையெல்லாம் நாங்க செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர்  மேற்கு மாவட்ட செயலாளர் காளிதாசன்  இராஜபாளையம் வட்ட வழங்கல் அதிகாரியிடம் ரேஷன் கடையில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை  புகாராக அளித்துள்ளார்.

காளிதாசனிடம் நமது அரசியல் டுடே சார்பாக பேசினோம்.

“ இராஜபாளையம் வட்டாட்சியரிடம் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம்.  அவர்கள் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்களே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளை  சேர்ந்து  நூறு கடைகளுக்கு மேல் உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 10 ஆயிரம் ரூபாய் என்றால் மாதம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து இராஜபாளையத்தில் உள்ள ஆளுங்கட்சி சேர்ந்தவர்கள்  அதிகாரிகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.

குறிப்பாக இராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு வர்த்தக விற்பனை

பண்டகசாலை Q 1066 (  SO )சரவணகுமார் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவராக இருக்கக் கூடிய ஒருவர் மூலம் வசூல் செய்து தனக்கு சேர வேண்டிய பங்கையும் பெற்றுக்கொள்கிறார்.

ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய ரேஷன் பொருள்களில் எடையை குறைத்து அதில் கிடைக்கக்கூடிய அரிசி சீனி போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். மேலும் சில பொருட்களையும் மக்கள் தலையில் கட்டுகின்றனர்.  அதன் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தை உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கொடுத்து வருகிறார்கள்.

 மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என்றார் காளிதாசன்.

மேலும்… நல்ல  அரிசி லோடு வந்தால் மொத்தமாக ரேஷன் அரிசிகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  

இந்த குற்றச்சாட்டுகளை நாம் ரேஷன் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்ற கூடியவர்களை கேட்ட பொழுது,  “ நாங்க என்ன சார் செய்ய முடியும்?  அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சொல்வதைக் கேட்டு தான் நாங்கள் வேலை செய்ய வேண்டிய உள்ளது” என தங்கள் மனக்குமுறல்களை தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து Q 1066 மேலாளராக பணிபுரியக்கூடிய சரவணகுமாரையே நேரில் சந்தித்துக் கேட்டோம்.

அது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை நான் யாரிடமும் வசூல் செய்யவில்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.

அப்படியென்றால்…  பொதுமக்களும் சில கடை விற்பனையாளர்களும் கூறுவது பொய்யா என நாம் மீண்டும் கேட்க… “எந்த ஒரு பிரச்சனையும் எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் சங்க நிர்வாகிகள் தான் முடிவு எடுப்பார்கள்” என கூறினார்.

இந்த சம்பவங்கள் குறித்து சில  கம்யூனிஸ்ட் தோழர்களிடம் நாம் கேட்ட பொழுது,  “ ஒவ்வொரு கடையிலும் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்வது உண்மைதான்.  இதுகுறித்து போராட்டம் நடத்த வேண்டும் என எங்கள் மாவட்ட கமிட்டியிடம் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

அண்மையில் இராஜபாளையம் வந்த புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்த பொழுது இந்த அவல நிலையையும் இதற்கு உடந்தையாக அரசியல்வாதிகளும்   அதிகாரிகளும் செயல்படுவது குறித்து தெரிவித்தார்

 கீழிருந்து மேல் நோக்கி கரன்சி நதி பாய்வதால்… ரேஷன் வசூல் ஊழல் பற்றி பேசினாலும், புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை.

ஒரு நகரிலேயே இப்படியென்றால் ஒரு மாநிலம் முழுதும் எப்படி இருக்கும்?