• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒவ்வொரு கிளையிலும் ஒரு சென்ட் நிலம்…அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டும் அதிமுக மச்சராஜா

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை  உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால்,  இனி  தமிழ்நாட்டில் பொது இடங்களில் அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்கள் வைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்கள் வைக்க காவல்துறையினர்  அனுமதி தராததால் மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகினர் அதிமுக நிர்வாகிகள். இந்த வழக்கில்,   “தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்.  கொடிக் கம்பங்கள் வைப்பதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று பட்டா இடங்களில் வைக்க வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வும்  உறுதி செய்தது.

இதையடுத்து தமிழ்நாடு முழுதும்  பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களை அகற்ற தமிழ்நாடு அரசின் வருவாய் துறை களமிறங்கியது.  இதற்கு எதிராக நடந்த சட்டப் போராட்டங்களில் உச்ச நீதிமன்றம், “ அரசுக்குச் சொந்தமான இடத்தை அரசியல் லாபத்துக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொது இடங்களில் கொடிக் கம்பம் வைக்கக் கூடாது. அவரவர் பட்டா இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் செய்யாத முன்னெடுப்பை அதிமுக தொடங்கியுள்ளது. விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விருதுநகர் வடக்கு அதிமுக ஒன்றிய செயலாளரும்  மாவட்ட கவுசிலருமான மச்ச ராஜா இந்த விவகாரத்தில் ஒரு புதிய பாதையைக் காட்டியுள்ளார்.

இதுகுறித்து மச்சராஜாவிடமே அரசியல் டுடே சார்பாக பேசினோம்.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து இனி பட்டா இடங்களில்தான் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது. எனவேதான் எங்களது ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்துக் கிளைகளிலும் கிளைக்கு ஒரு சென்ட்  (சுமார் 400 சதுர அடி) நிலத்தை கட்சிக்காக சொந்தமாக வாங்குவது என்று வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் தீர்மானம் போடுகிறோம். அடுத்த அண்ணா பிறந்தநாளுக்குள் அதாவது 2026 செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் எங்கள் ஒன்றியத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் தலா ஒரு சென்ட் நிலம் வாங்கி… முறையான பீடம் அமைத்து கொடிக் கம்பம் அமைத்து கொடியேற்றுவது என உறுதி பூண்டிருக்கிறோம். எங்கள் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களின் வழிகாட்டுதலில் இதை திறம்பட செய்து முடிப்போம்.

விருதுநகர் வடக்கு ஒன்றியத்தில் மொத்தம் 69 கிளைகள் இருக்கின்றன. இதில் சில ஊர்களில் இரண்டு, கிளை, மூன்று கிளைக் கழகங்கள் இருக்கும். இப்படி கணக்குப் பார்த்தால் மொத்தம் 16 ஊராட்சிகளில் 50 கிளைகளில் கொடியேற்ற அந்தந்த ஊர்களில் ஒரு சென்ட் நிலன் வாங்க முடிவு செய்திருக்கிறோம். இதற்கான நிதியை  கட்சி நிர்வாகிகளும் ஒன்றிய கழகமும் பகிர்ந்துகொள்ளும்.

ஏற்கனவே வடமலைக்குறிச்சியில் 52 அடி உயர அதிமுக கொடிக் கம்பத்தில் எங்கள் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேடிஆர் அவர்கள்  கொடியேற்றி வைத்தார்.  மேலும் வடக்கு  7 புதிய கொடிமரங்கள் நிறுவியிருக்கிறோம்.  இதன் தொடர்ச்சியாகத்தான் அனைத்து கிளைகளிலும் கட்சியின் சொந்த இடத்தில் கொடிக் கம்பங்கள் நிறுவும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார் மச்சர் ராஜா.

நாம் இதுகுறித்து விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரான  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் பேசினோம்.

“எப்போதுமே தமிழ்நாட்டில்  மற்ற அரசியல் கட்சிகளுக்கு அதிமுக முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல அதிமுகவுக்குள் விருதுநகர் மேற்கு மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு கிளையிலும் பட்டா இடத்தில் கொடிக்கம்பம் என்கிற எங்கள்  மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் இந்த முன்னெடுப்புக்கு நான் முழுமையான வரவேற்பு தெரிவித்துள்ளேன்.  அரசியல் கட்சிகள் என்பவை மக்களுக்காகத்தான். அந்த வகையில்  எங்கள் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியாரின் தலைமையில் அதிமுக மற்ற கட்சிகளை விட மக்களோடு நெருக்கமாகவும் மக்களுக்கு பயனுள்ள வகையிலும் இயங்குகிறது. இதுவே இதற்கு எடுத்துக் காட்டு” என்றார்.

மச்சராஜாவை தொடர்புகொண்டு மற்ற ஒன்றிய செயலாளர்களும் இதற்கான செயல் திட்டத்தைக் கேட்கும் நாள் தொலைவில் இல்லை.   

.