• Mon. Apr 29th, 2024

பிப்ரவரி 9ல் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Byவிஷா

Feb 6, 2024

பிப்ரவரி 9 ஆம் தேதியன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதவாது..,
‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும்; ‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது’ என்பது போலவும்; தான் வகித்த மந்திரி பதவிக்கும், தற்போது வகிக்கும் எம்.பி., பதவிக்கும் தகுதியற்ற, தரமற்ற, தற்குறி புத்திகொண்ட ‘ஆண்டிமுத்து ராசா’ என்ற நாலாந்தரப் பேர்வழி, தமிழக மக்களின் இதய தெய்வம், கழகத்தின் காவல் தெய்வம் ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி குக்கல் குரலில் குரைத்திருக்கிறது.
இன்றைக்கு பதவிச் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கட்சி, 1967-ல் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு புரட்சித் தலைவர் செய்த தியாகம்தான் காரணம் என்பதை இவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அன்றைக்கு இந்த ஜென்மம் 4 வயதில் அரைக்கால் சட்டை கூட இல்லாமல் அலைந்திருக்கும். இந்த நபர், தலைவராக ஏற்றுக்கொண்ட கருணாநிதியும், அவரது குடும்பமும் கடன் தொல்லையால் தவித்த போது, அவரது மருமகன் முரசொலி மாறன் பெயரில் தயாரிக்கப்பட்ட ‘எங்கள் தங்கம்’ என்ற திரைப்படத்தில் இலவசமாக நடித்துக் கொடுத்து, அந்த குடும்பத்தையே வாழவைத்த தெய்வங்கள் புரட்சித் தலைவர் அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் என்பது இந்த அறிவிலிக்கு தெரிந்திருக்காது.
இந்த உண்மையை படத்தின் நூறாவது நாள் விழாவில் கருணாநிதியும், அவரது அன்பிற்கினிய மாறனும் பேசியதாக அன்றைய முரசொலியில் வெளிவந்ததை இவர் படித்திருக்கமாட்டார். ஆண்டிமுத்து ராசா 1963-ம் ஆண்டு பிறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது அவரது வயது 4. எனவே, புரட்சித் தலைவரின் அருமை, பெருமைகளை அறிய வாய்ப்பில்லை. தி.மு.க 1967-லும், தொடர்ந்து 1971-லும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு புரட்சித் தலைவர் அவர்கள் எப்படி சுற்றிச் சுழன்று பணியாற்றினார் என்பது இவருக்குத் துளியளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், “என்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர்.” என்று சொன்னபோது, ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள் என்று கேட்டுத் தெரிந்திருந்தால், இந்த ஆண்டிமுத்து ராஜா, புத்தி பேதலித்துப் போய் உளறியிருக்கமாட்டார்.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளை நினைவுபடுத்தி அவரை எச்சரிக்கிறேன். தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்க மனமில்லாமல் திமிரோடு நடக்கும் ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 9.2.2024 – வெள்ளிக் கிழமை காலை 9 மணியளவில், எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *