தேனி மாவட்டம் சின்னமனூரில் தென்னிந்திய இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக கட்சியின் நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

சின்னமனூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் புள்ளிமான் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, தேன் சிட்டு, இளம் சிட்டு, கரிச்சான், நடுமாடு, பெரிய மாடு, என 8 பிரிவின்கீழ் சுமார் 100க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளுடன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.
சின்னமனூர் – மேகமலை ரோட்டில் 9 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாடுகளின் பிரிவுகளை வைத்து தூரம் நிர்ணயம் செய்யப்பட்டது,
முதலில் கொடி வாங்கும் மாடுகளுக்கும், மாட்டு வண்டி சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டி தூரத்தை கடந்து வெற்றிபெற்ற மாடுகளுக்கு பரிசுத்தொகை கோப்பை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தினை சாலையோரம் இருபுறங்களிலும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.