கோவை, மலுமிச்சம்பட்டி பிரிவு அருகில் 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் பெஹ்ரா (22) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சந்தீப் குமார் பெஹ்ரா (22) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதை அடுத்து சிறையில் உள்ள கஞ்சா வழக்கு குற்றவாளியான சந்தீப் குமார் பெஹ்ரா என்பவரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட அதற்கான ஆணை நகல் வழங்கப்பட்டது.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.